ADVERTISEMENT

துபாயில் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி.. பயணிகள் விட்டுச் சென்ற Dh1 மில்லியன் மதிப்பிலான வைரம் மற்றும் Dh3.6 மில்லியன் ரொக்கம்.. திருப்பித் தந்த ஓட்டுனர்கள்..!!

Published: 2 May 2023, 12:23 PM |
Updated: 2 May 2023, 12:41 PM |
Posted By: Menaka

துபாயில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகள் மறந்து விட்டுச் சென்ற பொருட்களில் 1 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள வைரங்கள் அடங்கிய ஒரு கருப்பு பை மற்றும் 3.6 மில்லியன் ரொக்கம் ஆகியவை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக RTA அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஜனவரி 2022 முதல் மார்ச் 2023 வரை துபாயில் உள்ள சுமார் 101 நேர்மையான ஓட்டுநர்கள், பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொருட்களை தங்கள் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர உதவியுள்ளனர். எனவே, நேர்மையான அந்த 101 ஓட்டுநர்களையும் RTA கௌரவித்துள்ளது.

இதுபோல பயணிகள் மறந்து விட்டுச் சென்ற மற்ற பொருட்களில் 200,000 திர்ஹம் மதிப்புள்ள தங்கம் அடங்கிய பிளாஸ்டிக் பை, விலையுயர்ந்த ஹேண்ட்பேக், $50,000 மதிப்புள்ள கடிகாரம், 183,000 திர்ஹம் ரொக்கம், 200,000 திர்ஹம் தொகை கொண்ட கருப்புப்பை மற்றும் $60,000 மதிப்புள்ள விலையுயர்ந்த கடிகாரம் போன்றவை அடங்கும்.

ADVERTISEMENT

பயணிகள் விட்டுச்சென்ற பொருட்கள் எவ்வாறு திரும்பப் பெறப்படும்?

பெரும்பாலும் வாகனங்களில் மறந்து விட்டுச் செல்லப்படும் பொருட்கள் நேரடியாகவோ அல்லது துபாய் போலீஸ், துபாய் விமான நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்படும். அதாவது, ஒரு பயணி தான் மறந்து விட்டுச் சென்ற பொருள் குறித்து புகாரளித்தால், அந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இது குறித்து பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் பஹ்ரோசியன் அவர்கள் கூறுகையில், தொலைந்துபோன அல்லது மறந்து விடப்பட்ட பொருட்களை நேர்மையாக ஓட்டுநர்கள் திருப்பியளிக்கும் செய்திகள் மகிழ்ச்சியைத் தருவதுடன் நேர்மை, நல்ல நடத்தை மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இத்தகைய நிகழ்வுகள் ஓட்டுனர்களின் நேர்மையை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, துபாய் போக்குவரத்து மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவுவதாகக் கூறியுள்ளார். எனவே எமிரேட்டில் நேர்மை தவறாத ஓட்டுநர்களை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துவதில் RTA கவனம் செலுத்துகிறது. இது எமிரேட்டில் டாக்ஸி சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் குடியிருப்பாளர்களுக்கு துபாயின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் உள்ள பொதுப் போக்குவரத்து பயனர்கள் இழந்த பொருட்களை உடனடியாக மீட்டெடுத்து, அதனை திருப்பி அளித்த செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர்  ஓட்டுநர்களுக்கு நன்றியையும் தொரிவித்துள்ளார். இது போன்று குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் துபாய் டாக்ஸியில் தவறவிட்ட பொருட்கள் குறித்து 800 9090 இல் புகாரளிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.