ADVERTISEMENT

UAE: இன்டர்சிட்டி பேருந்து கட்டணம், மளிகைப் பொருள் விலைக் குறைவுக்கு வழிவகுத்த டீசல் விலைச் சரிவு!!

Published: 3 May 2023, 6:01 PM |
Updated: 3 May 2023, 6:22 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் மே மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலில் ஒரு லிட்டருக்கான டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஷார்ஜாவில் அனைத்து நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களிலும் பேருந்து கட்டணத்தை குறைப்பதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது. அதன்படி, ஷார்ஜா எமிரேட்டில் உள்ள இன்டர்சிட்டி பேருந்துகளில் மே 2 முதல் ஒரு பயணத்திற்கான கட்டணத்தில் 3 திர்ஹம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக SRTA கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, ஷார்ஜாவின் ரோலாவிலிருந்து துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ்க்கு பேருந்து கட்டணம் 20 திர்ஹம்களில் இருந்து 3 திர்ஹம் குறைந்து இப்போது 17 திர்ஹம்களாக உள்ளது. இதுபோலவே, ரூட் 112க்கான பேருந்து டிக்கெட் விலை 7 லிருந்து 6 திர்ஹம்களாகவும், ரூட் 114 க்கான பேருந்துகளின் கட்டணம் 8 திர்ஹம்களிலிருந்து 6 திர்ஹம்கலாகவும் குறைந்துள்ளது.

அவற்றிலும் ரூட் 115 இல் பல்வேறு தள்ளுபடிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவை ஏறும் இடம் மற்றும் இறங்குமிடத்தைப் பொறுத்து 2 முதல் 3 திர்ஹம்கள் வரை குறைக்கப்பட்டுள்ளன. எனவே, குறுகிய பாதைகளுக்கு 2 திர்ஹம்கள் சரிந்து 8 திர்ஹமிலிருந்து 6 திர்ஹம்களாக வசூல் செய்யப்படுகிறது. நீண்ட நிறுத்தங்களுக்கு கட்டணத்தில் 3 திர்ஹம் சரிவு ஏற்பட்டு 30 திர்ஹம்களில் இருந்து 27 திர்ஹம்களாக உள்ளது.

ADVERTISEMENT

மேற்கூறியது போல, ரூட் 116, 611 மற்றும் 616க்கான கட்டணங்களும் 2 திர்ஹம் மற்றும் 3 திர்ஹம்களாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று113, 308, 309, 313, 117, 118 மற்றும் 811 ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொரு பயணத்திலும் 2 முதல் 3 திர்ஹம் வரை சேமிக்க முடியும்.

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் டீசல் விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், ஏப்ரல் மாதத்தில் 3.03 திர்ஹம்களாக இருந்த டீசலின் விலையில் 12 ஃபில்ஸ் குறைந்து தற்போது (மே மாதத்தில்) ஒரு லிட்டர் டீசல் 2.91 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மார்ச் மாதத்தில் டீசல் லிட்டருக்கு 3.14 திர்ஹம்ஸ் விலையிலிருந்து 11 ஃபில்ஸ் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிப்ரவரியில் ஒரு லிட்டர் டீசல் விலை 3.38 திர்ஹம் ஆக இருந்த வேளையில், கடந்த மூன்று மாதங்களில் டீசல் விலையில் கிட்டத்தட்ட அரை திர்ஹாம் (47 ஃபில்ஸ்) சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துக் கட்டணங்கள் குறைவது மட்டுமல்லாமல், நுகர்வோர் பொருட்களின் போக்குவரத்துச் செலவும் குறையும் என்றும், மே மாதத்தில் மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மே 2023 இல், Super 98 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3.16 திர்ஹம்களாக இருக்கும், இது ஏப்ரல் மாதத்தில் 3.01 திர்ஹம் ஆக இருந்தது. இதேபோல், ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.90 திர்ஹம்களில் இருந்து 3.05 திர்ஹம் ஆகவும், E-Plus லிட்டருக்கு 2.82 திர்ஹ்ம்களில் இருந்து 2.97 திர்ஹம்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.