ADVERTISEMENT

அமீரகத்தில் சமூக பணிகளுக்காக ‘பிரின்சஸ் டயானா’ விருது பெற்ற இளம் வயது இந்திய மாணவிகள்..!!

Published: 1 Jul 2023, 6:57 PM |
Updated: 1 Jul 2023, 7:08 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் படித்து வரும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் அவர்களின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் தொண்டு பணிகளுக்காக, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசியான பிரின்சஸ் டயானாவின் நினைவாக வழங்கப்படும் ‘தி டயானா விருது’ (The Diana Award) பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

ADVERTISEMENT

அவர்களில் இளம் வயதிலேயே பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் அனன்யா மணிகண்டன் (வயது 12) மற்றும் ஆலியா ருமானா (வயது 15) ஆகிய இருவரும் தங்களின் இடைவிடாத தொண்டு பணிகளுக்காகவும், அமீரகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தில் முக்கியப் பாங்காற்றி வருவதற்காகவும் இந்த விருதினைப் பெற்று சாதித்துள்ளனர்.

அனன்யா மணிகண்டன்:

ஷார்ஜாவில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (Delhi Private School) படிக்கும் 12 வயது பள்ளி மாணவி அனன்யா மணிகண்டன் (Ananya Manikandan), அவரது சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளின் மூலம் அமீரகத்தின் பல இடங்களைத் தூய்மைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருதினை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அனன்யாவின் தந்தையான மணிகண்டன் என்பவர் கூறுகையில், இதுவரை துபாய், உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களில் கடற்கரையை சுத்தம் செய்தல் உட்பட ஏராளமான தூய்மைப்படுத்தும் இயக்கங்களை அனன்யா ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்ட அனன்யா, பிளாஸ்டிக் மாசுபாடு, பள்ளிகளில் கொடுமைப்படுத்துதல், அகதிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தனது குறும்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இதற்கிடையில், சுற்றுப்புற மறுசுழற்சி பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் அனன்யா, எமிரேட்ஸ் மற்றும் எமிரேட்ஸ் சுற்றுச்சூழல் குழுவின் உறுப்பினராக பங்காற்றி வருவதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அத்துடன் எமிரேட்ஸ் சுற்றுச்சூழல் குழு (Emirates Environmental Group), நாட்டில் உள்ள முதல் 10 மறுசுழற்சி செய்பவர்களில் அனன்யாவுக்கு தொடர்ந்து விருதுகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆலியா ருமானா:

துபாயில் படித்து வரும் மற்றொரு இந்திய மாணவியான ஆலியா ருமானா (Aalia Rumana) என்பவரும் பிரின்சஸ் டயானா விருதினை பெற்றுள்ளார். துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலில் (Indian High School) படித்து வரும் பள்ளி மாணவியான ஆலியா, அவரது எட்டு வயதிலேயே மார்பக புற்றுநோயாளிகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய மாணவர்கள் என பலருக்கும் ஆதரவளித்து வருகிறார்.

மேலும், ஜூலை 2016 முதல் ஜூன் 2021 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்காக 4 முறை தனது தலைமுடியை தானம் செய்துள்ளார். இந்த சேவைக்காக ஆலியாவுக்கு 2021 இல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘Protect Your Mom’ அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஆலியா பணியாற்றி வருகிறார்.

ஒரு பக்கம் பள்ளிப்படிப்பு, மற்றொரு பக்கம் தொண்டு பணிகள் என இரண்டையும் வெற்றிகரமாக சமநிலையில் எடுத்துச் செல்லும் ஆலியா, அவரது அகாடெமிக் சாதனைகளுக்காக உள்ளூர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை தொண்டு பணிகளையும் அயராமல் செய்து வரும் ஆலியா இது குறித்து மனம் திறக்கையில், தனது குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் இருப்பதால், அது தன்னை புற்றுநோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆதரவளிக்கவும் தூண்டியதாக கூறியுள்ளார்.

இந்த இருவர் மட்டுமில்லாது மேலும் சில இந்திய மாணவிகளும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அதில் துபாயில் உள்ள ஜெம்ஸ் அவர் ஓன் இந்தியன் பள்ளியில் (Gems our own indian school) படிக்கும் முஸ்கன் பாத்திமா, ஷியுலி ஷெட்டி, முஹம்மது யாசீன் நிவாஸ், இம்ரானா இலியாஸ் மற்றும் தனு ஸ்ரீ சுரேஷ் ஆகிய ஐந்து மாணவர்களுக்கும் அவர்களின் சமூக சேவைகளுக்காக பிரின்சஸ் டயானா விருதுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.