ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாக 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் ஷாப்பிங் மால், ரெஸ்டாரண்ட் போன்ற பொது இடங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒரு மாத காலமாக, கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து, அமீரகம் முழுவதும் ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் பெரியவர்களின் வயது வரம்பானது 60 லிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், துபாயில் மட்டும் கடந்த ஜூன் மாதம் 18 ம் தேதி முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான தடையை நீக்கி அனைத்து வயதினரும் ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி
இந்நிலையில், தற்பொழுது தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டம் நிறைவு பெற்றதற்கான அறிவிப்பை தொடர்ந்து, அமீரகத்தில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
இதே போன்று வாகனங்களில் பயணிப்பது மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவது தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஒரு வாகனத்தில் மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதி
அமீரகத்தில் ஒரு வாகனத்தில் மூன்று பேருக்கு மேல் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு இந்த தடையிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும், வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
அமீரகத்தில் வசிப்பவர்கள் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் சைஃப் வலியுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதே போன்று, அரசாங்கம் அறிவித்துள்ள கொரோனாவிற்கான அனைத்து சுகாதார மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொது மக்கள் முறையாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.