ADVERTISEMENT

UAE: சென்னை உட்பட இந்தியா செல்லும் ‘வந்தே பாரத்’ விமானங்களில் நேரடியாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்..!! இந்திய தூதரகம் அறிவிப்பு..!!

Published: 28 Jun 2020, 4:02 PM |
Updated: 28 Jun 2020, 4:25 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களில் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து தூதரகம் மூலம் விண்ணப்பத்திருந்தவர்கள், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நான்காம் கட்டத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணிப்பதற்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தூதரகம் இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தூதரகம் மேலும் கூறும்போது, பயணம் மேற்கொள்பவர்கள் இந்தியா செல்வதற்கான கட்டாய நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், முதலில் வந்தவர்களுக்கு முதலில் சேவை என்ற அடிப்படையிலேயே பயணத்திற்கான இருப்பிடங்களை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

பயணம் செய்ய விரும்புபவர்கள் ஏர் இந்தியாவின் வலைத்தளமான www.airindiaexpress.in இல் நேரடியாகவோ அல்லது அபுதாபி, அல் அய்ன், துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களில் உள்ள ஏர் இந்தியா விமானத்தின் அலுவலகங்கள் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. மேலும் துபாயில் இருக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் முகவர்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூலை 3 முதல் ஜூலை 14 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களில், இந்தியா செல்வதற்கான பயண டிக்கெட்டுகளின் நேரடி விற்பனை இன்று ஜூன் 28, 2020 மாலை 7 மணி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு ஜூலை 1 ஆம் தேதி துபாயிலிருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜூலை 3 முதலான விமானங்களுக்கே நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தூதரகம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்துவர நான்காம் கட்டத்தில் மொத்தம் 170 விமானங்கள் 17 நாடுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 59 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட இருக்கிறது. இருப்பினும் இந்த நான்காம் கட்டத்தில் தமிழகத்திற்கு வெறும் ஐந்து விமானங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT