ADVERTISEMENT

UAE: சாலையை கடக்க முயன்ற ஆசிய நாட்டவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற டிரைவர்!! மூன்று மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறை…

Published: 26 Jul 2023, 3:09 PM |
Updated: 26 Jul 2023, 3:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையில் பாதசாரிகளுக்கென்று நியமிக்கப்படாத பகுதியிலிருந்து சாலையை கடக்க முயன்ற ஆசிய நாட்டவர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய அரேபிய ஓட்டுநரை ஷார்ஜா காவல்துறையினர் மூன்று மணி கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தற்போது அவர் அல்-காசிமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரிகள் அளித்துள்ள தகவல்களின் படி, ஷார்ஜாவில் உள்ள செகண்ட் இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரீட்டில் (Second Industrial Street) நடந்த விபத்து பற்றிய தகவல் முதலில் மத்திய செயல்பாட்டு அறைக்கு (Central Operations Room) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவலர்கள் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிய நபர் பாதசாரிகள் கடப்பதற்கு அல்லாத பெயரிடப்படாத பகுதியிலிருந்து சாலையைக் கடக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனம் பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து, போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கினர். விபத்து நடந்து மூன்று மணி நேரத்திற்குள் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

ஹிட் அண்ட் ரன் விபத்துகளுக்கு சில முக்கிய காரணங்கள்:

  • அனுமதிக்கப்படாத இடத்திலிருந்து சாலையைக் கடக்கும் பாதசாரிகள்
  • பாதசாரிகளுக்கான பாதையில் அவருக்கு முன்னுரிமை கொடுக்காத ஓட்டுநர்கள்

அமீரகத்தில், பாதசாரிக்கு தீங்கு விளைவிப்பதும், விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பிச் செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, சாலையைக் கடக்கும் போது பாதசாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டும் சாலையைக் கடக்குமாறும் ஷார்ஜா காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், ஓட்டுநர்களும் சாலையில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மெதுவாகச் செல்ல வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி, விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால், குடியிருப்பாளர்கள் சமூகப் பொறுப்புடன் புகாரளிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த மாதத் தொடக்கத்தில் போக்குவரத்து மற்றும் ரோந்து நிர்வாகம் (Traffic and Patrol Administration) “Road Right for Drivers and Pedestrians” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரம் சாலைப் பயனர்களான பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களிடையே போக்குவரத்து கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் போக்குவரத்து உரிமைகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.