ADVERTISEMENT

UAE : வெளிநாடுகளில் இருந்து திரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் “Covid19 நெகடிவ் டெஸ்ட்” சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்..!! அமீரக அரசு அறிவிப்பு..!!

Published: 29 Jun 2020, 6:28 AM |
Updated: 29 Jun 2020, 8:40 AM |
Posted By: jesmi

வெளிநாட்டில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களில் அமீரகத்திற்கு திரும்பும் அனைத்து பயணிகளும் கொரோனாவிற்கான பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து அமீரகத்திற்கு திரும்பும் குடியிருப்பாளர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழை (Covid-19 Negative Test Certificate) வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த சான்றிதழ் இல்லாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருந்து அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் ஆகியவை ஒன்றிணைந்து அறிவித்த முக்கிய வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், உலகளவில் 17 நாடுகளில் உள்ள 106 நகரங்களில் இருக்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அதிகமான நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் smartservices.ica.gov.ae என்ற இணையதளத்தில் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம் என்றும் NCEMA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் இல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் குடியிருப்பாளர்களுக்கு, கோவிட் -19 சோதனைகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பி வந்தவுடன் நடத்தப்படலாம் என்றும் குடியிருப்பாளர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது ஹோட்டல் தனிமைப்படுத்தலிலோ இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவிக்கான அனைத்து செலவுகளும் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நபரே ஏற்க வேண்டும் என்றும் NCEMA தெரிவித்துள்ளது.

திரும்பி வரும் அனைத்து குடியிருப்பாளர்களும் ஒரு ஸ்மார்ட் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும் என்றும் இந்த அப்ளிகேஷனானது பயணிகள் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது அவர்களை அரசின் சுகாதார நிறுவனங்களின் மூலம் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப வேண்டி விண்ணப்பித்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விமான சேவைகள் தொடர்பான எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.