வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் சிறப்பு விமானங்களில் பயணம் செய்வதற்கு முன், அந்தந்த தூதரகங்கள் அல்லது துணை தூதரகங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தூதரகத்தில் பதிவு செய்யத் தவறியவர்கள் வந்தே பாரத் திட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கட்டளையிட்டபடி, இந்தியாவிற்கு திரும்பி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல் எண்களை புதுப்பித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறியவர்கள் விமான நிலையங்களில் தரை இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திருப்பி அனுப்பும் சிறப்பு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதல் தொடங்கி இன்று வரை மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், இணையதளத்தில் பதிவுசெய்த ஆயிரக்கணக்கான இந்தியர்களில் அத்தியாவசிய தேவையை கருத்தில்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தூதரகம் மூலம் பயணம் செய்ய உறுதி செய்யப்படுவபர்கள் மட்டுமே இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 29 முதல் வந்தே பாரத்தின் நான்காம் கட்ட சிறப்பு விமானங்களில் பயணிப்பதற்கு டிக்கெட்டுகளை நேரடியாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அலுவலகத்திலோ அல்லது அமீரகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் மூலமாகவோ டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தற்போது விமான பயணத்திற்கான டிக்கெட்டை நேரடியாக பெற்றாலும் தூதரகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம் என்றும், பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. நான்காம் கட்டத்தில் 17 நாடுகளுக்கு 170 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.