ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் ஓரிரு நாட்களாக அதிவேகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இதன் காரணமாக குடியிருப்பாளர்களின் வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
அவ்வாறு இருக்கையில், வெள்ளிக்கிழமையன்று துபாயைச் சேர்ந்த முஹம்மது சஜ்ஜாத் என்பவர், தனது குடும்பத்தினருடன் அபுதாபியில் உள்ள அல் ஹயார் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, வேகமாக வீசிய காற்றில் சைன்போர்டு ஒன்று அவரது கார் மீது விழுந்துள்ளது.
இது குறித்து அவர் விவரிக்கையில், காரில் குடும்பத்தினருடன் சிறிது நேரம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை வலுவடைந்ததால், சாலையின் ஓரம் காரை நிறுத்தி விட்டு இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகவும், காற்றும் மழையும் சற்று தணிந்தவுடன் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென சைன்போர்டு காரின் மேல் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.
அச்சமயம், அவரது கால் காரின் ஆக்ஸிலேட்டரில் இருந்ததாகவும், இரண்டு நொடி தாமதமாகி விழுந்திருந்தால் அது அவரது கார் கண்ணாடியை உடைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று கட்டிடம், வாகனங்கள் போன்ற ஏராளமான சொத்துகளைச் சேதப்படுத்தியுள்ளது. ஷார்ஜாவில் அதிவேகமாக வீசிய காற்றில் கடைக்காரர்கள் சூட்கேஸ்கள் உட்பட தங்கள் பொருட்களை காற்றில் பறக்கவிடாமல் தடுக்க போராடும் வீடியோ கிளிப் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.
View this post on Instagram
அதுபோல, கட்டிடங்களில் உள்ள கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த கடைகளின் புகைப்படத்தை ஷார்ஜாவில் வசிக்கும் தய்பா என்பவர் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சேதங்களை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
இன்று அதிகாலை, துபாய் முனிசிபாலிட்டி ஊழியர்கள் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் பிற ஆபத்துக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் மற்ற எமிரேட்களில், குப்பைகளை அகற்றவும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு உதவவும் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் சாலைகளிலும் அதிவேகமாக வீசிய காற்றால் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.