ADVERTISEMENT

கடற்கரைகளுக்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக 140 மீட்புக் குழுவினரை நியமித்துள்ள துபாய் முனிசிபாலிட்டி..!!

Published: 21 Aug 2023, 2:16 PM |
Updated: 21 Aug 2023, 2:53 PM |
Posted By: Menaka

துபாய் முனிசிபாலிட்டியானது துபாய் முழுவதும் உள்ள பொதுக் கடற்கரைகளுக்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 140 மீட்புக் குழுவினரை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அல் மம்சார் பீச், அல் மம்சார் கார்னிச், ஜுமைரா 1, 2 மற்றும் 3, உம் சுகீம் 1 மற்றும் 2, எல் ஷோரூக், அல் சுஃபூ மற்றும் ஜெபல் அலி உள்ளிட்ட துபாயின் பொது கடற்கரைகளில் அனைத்திலும் இந்த பாதுகாப்புக் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் 124 தகுதி வாய்ந்த உயிர்காப்பாளர்கள், 12 மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு செயல்பாட்டு மேலாளரால் கண்காணிக்கப்படும் இரண்டு உதவி மேலாளர்கள் ஆகியோர் அடங்குவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மீட்புக் குழுவினருக்கு புதிய ஆல்-டெரெய்ன் பீச் வாகனங்கள் (All-Terrain beach Vehicles -ATVs) மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது கடற்கரைகள் மற்றும் நீர்வழிகள் மேலாண்மைத் துறையின் இயக்குநர் இப்ராஹிம் முகமது ஜுமா அவர்கள் பேசுகையில், இந்த மீட்புக் குழு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலும், மேலும் இரவு நீச்சல் அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் 24 மணிநேரமும் வேலை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் மீட்புக் குழுவினர், கடற்கரைகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து, கடற்கரைக்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதன் மூலம், பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், துபாய் கடற்கரைகளில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் அதிக தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் உயர் மட்டங்களுக்கு தொடர்ந்து பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, கடற்கரைகளில் சமீபத்திய மற்றும் புதுமையான வாகனங்கள், முதலுதவி உபகரணங்கள், ATVகள், வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், கடற்கரைக்கு செல்பவர்களுக்கான பாதுகாப்பு தகவல்கள் அடங்கிய சைன்போர்டுகளையும், கடற்கரை நீச்சல் எச்சரிக்கை கொடிகளையும் துபாய் முனிசிபாலிட்டி நிறுவியுள்ளது.

கொடிகள் கூறுவது என்ன?

    • சிவப்புக் கொடி- நீந்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி
    • மஞ்சள் கொடி-எச்சரிக்கையுடன் நீந்துமாறு அறிவுறுத்துகிறது.
    • ஊதா கொடி- கடல் உயிரினங்கள் இருக்கும் பகுதியில் நீந்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது

இதன் மூலம், துபாய் முனிசிபாலிட்டியின் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.