ADVERTISEMENT

அபுதாபியின் புதிய விமான நிலையம் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!!

Published: 31 Aug 2023, 7:16 PM |
Updated: 1 Sep 2023, 2:09 PM |
Posted By: Menaka

அபுதாபியில் கட்டப்பட்டு வந்த அதிநவீன புதிய பிரம்மாண்டமான புதிய விமான நிலையமானது விரைவில் திறக்கப்படவுள்ளதாக அபுதாபி ஏர்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. அதன் படி, தற்போது கட்டுமான கட்டத்தில் உள்ள மிட்ஃபீல்ட் டெர்மினல் பில்டிங் என அழைக்கப்படும் டெர்மினல் Aஐ இந்தாண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 742,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட டெர்மினல் A ஆனது, உலகின் மிகப்பெரிய விமான நிலைய டெர்மினல்களில் ஒன்றாகும். மேலும் இது AUH இன் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த அதிநவீன டெர்மினல் செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை வரவேற்கும் மற்றும் எந்த நேரத்திலும் 79 விமானங்களை இயக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டெர்மினல் Aஇல் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதால், ஒரு மணி நேரத்திற்கு 11,000 பயணிகளை செயலாக்க முடியும் என்று கூறப்படுகிறது. அத்துடன் பயணிகளுக்கு சுமூகமான போர்டிங் அனுபவத்தை வழங்க செல்ஃப் சர்வீஸ் கியோஸ்க்குகள், நெறிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் (streamlined security checkpoints) மற்றும் லக்கேஜ்களைக் கையாளும் அதிநவீன அமைப்புகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நவீன கட்டமைப்புடன், அழகிய வடிவமைப்பு செயல்பாடுகளுடன் கலந்து, கட்டிடத்தைச் சுற்றி மூடப்பட்டிருக்கும் கண்ணாடி சுவர்களானது பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கும் என்றும் அதேநேரத்தில் பயணிகளுக்கு ஒரு குடிமை இடத்தை (civic space) உருவாக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமீரகத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளுக்கு ஏற்ப, ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள், மேம்பட்ட வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (HVAC) (Heating, Ventilation and Air-Conditioning -HVAC) அமைப்புகள் போன்ற நிலையான பொருட்கள் கட்டுமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெர்மினல் A கார் பார்க் கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு (integrated solar photovoltaic system) தற்போது மூன்று மெகாவாட் (MW) சூரிய ஒளிமின்னழுத்த (PV) ஆலைக்கு சக்தி அளிக்கிறது, இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5,300 டன் CO₂ உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, 163 சில்லறை விற்பனை நிலையங்கள், ஓய்வெடுக்கும் பகுதிகள் மற்றும் ஸ்பா வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளும் இந்த டெர்மினலில் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி ஏர்போர்ட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் ஹமத் பின் தஹ்னூன் அல் நஹ்யான் அவர்கள் பேசுகையில், டெர்மினல் A அபுதாபியின் புதிய நுழைவாயிலாகவும், அபுதாபியின் 55 ஆண்டு கால விமான வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை திருப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சர்வதேச பயணிகளுக்கு ஒரு பிரீமியம் விமான நிலைய அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை டெர்மினல் A பிரதிபலிப்பதாக அபுதாபி ஏர்போர்ட்ஸின் நிர்வாக இயக்குநரும் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியுமான எலினா சோர்லினி அவர்கள் கூறியுள்ளார்.