ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
NCMஇன் கூற்றுப்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலப் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அது ஒரு வெப்பமண்டல காற்றழுத்தத்தை உருவாக்கும். இதனால் மணிக்கு 62 கிமீ வேகத்தில் வீசக்கூடிய சுழல் காற்று உருவாகும். இந்த சுழல் காற்று அதிகபட்சமாக 63 கிமீ வேகத்தில் வீசும் போது, இது புயலாக உருமாறும் என்றும் NCM விளக்கமளித்துள்ளது.
மேலும், நாட்டின் சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், ஆங்காங்கே ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், கிழக்குப் பகுதியில் வெப்பச்சலன மேகங்கள் கூடுவதால், பிற்பகலில் மழை பெய்யும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமீரகத்தின் தென்கிழக்கு திசையில் லேசானது முதல் மிதமான காற்று வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், சில சமயங்களில் மணிக்கு 40கிமீ வேகத்தில் புழுதியுடன் கூடிய காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை மாற்றம், அமீரகத்தில் எந்த நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், அரபிக்கடலில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி ஈரப்பதமான காற்று நகரும் என்பதால், மழையை உண்டாக்கக்கூடிய மேகங்கள் உருவாகும் என்று NCM கூறியுள்ளது.
முன்னதாக NCM வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், எதிர்வரும் அக்டோபர் 24ஆம் தேதி வரை அமீரகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel