ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, இன்று (அக்டோபர் 22, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.
மேலும், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா போன்ற அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், ஆணையம் இன்று இரவு 8 மணி வரை அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
மற்றொரு பக்கம், அரபிக் கடலில் தேஜ் புயல் வலுப்பெற்று வருவதால், அதன் தாக்கத்தை ஓரளவு அமீரகம் சந்திக்கும் என்று NCM தெரிவித்திருக்கின்றது. ஓமனின் கடற்கரையிலிருந்து 500 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயலானது, தற்போது 2-வது வகையாக இருந்தாலும், அடுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது 3வது வகையாக தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், அமீரகத்தின் மலைப் பகுதிகளில் கனமழைப் பெய்து கொண்டிருக்கும் போது, சாலைகளில் வாகனங்கள் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இத்தகைய சீரற்ற வானிலையின் போது, அமீரகக் குடியிருப்பாளர்கள் பின்வரும் மூன்று விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்று NCM எச்சரிக்கை விடுத்துள்ளது:
- மழைநேரங்களில் முற்றிலும் தேவையில்லாத போது வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு வாகனம் ஓட்டினால், சாலையில் செல்லும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக கவனமாகவும், எச்சரிக்கையாகவும், விழிப்புடன் இருக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.
- சாலைகளில் தெரிவுநிலை குறையும் போது, குறைந்த-பீம் விளக்குகளை இயக்கவும்.
- நாட்டின் வானிலை நிலைமைகளைப் பற்றி அறிந்து கொள்ள, மையத்தின்உத்தியோகபூர்வ சேனல்களைப் பின்பற்றவும், அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று போல நாளை மதியமும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பனி மூட்டம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel