ADVERTISEMENT

இந்தியா சென்றடைந்த அமீரக அதிபர்.. நேரில் சென்று வரவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி..!!

Published: 10 Jan 2024, 11:48 AM |
Updated: 10 Jan 2024, 11:48 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இந்தியாவில் நடைபெற உள்ள வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் (Vibrant Gujarat Global Summit) தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

ADVERTISEMENT

நேற்று செவ்வாயன்று (ஜனவரி 9) அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமீரக அதிபருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிபர் ஷேக் முகமதுவை கைகுலுக்கி வரவேற்ற காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதேசமயம், விமான நிலையத்தில் அமீரக அதிபரைக் கட்டியணைத்து வரவேற்ற பிரதமர் மோடி, “எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை இந்தியாவுக்கு வரவேற்கிறோம். நீங்கள் எங்களைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன்பிறகு, விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட இரு தலைவர்களும் குஜராத்தின் அகமதாபாத்தில் சாலையின் குறுக்கே வரிசையாக நின்றிருந்த மக்கள் கூட்டம் கை அசைப்பதைக் காணும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மேலும், இந்தியப் பிரதமர் மோடி அமீரக அதிபரை வரவேற்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள அதேவேளையில், அமீரக அதிபர் அல் நஹ்யானும் தனக்கு கிடைத்த அன்பான வரவேற்பைப் பற்றி X தளத்தில் அரபு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவிட்டுள்ளார்.

அதில்; “இரு நாடுகளையும் இணைக்கும் வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் இன்று நான் சந்தித்தேன். இந்தியா மற்றும் UAE இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து செழித்து வருகிறது, மேலும் நமது பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின்படி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பூங்காக்கள் ஆகிய துறைகளில் இரு தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel