ADVERTISEMENT

துபாயில் மெட்ரோ மற்றும் டிராமுக்குள் இ-ஸ்கூட்டர்களைக் கொண்டு செல்ல இன்று முதல் தடை.. அறிவிப்பை வெளியிட்ட RTA..!!

Published: 1 Mar 2024, 7:37 PM |
Updated: 1 Mar 2024, 7:45 PM |
Posted By: Menaka

துபாயில் பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மார்ச் 1ம் தேதியான இன்று முதல் மெட்ரோ மற்றும் டிராமுக்குள் இ-ஸ்கூட்டர்களைக் கொண்டு செல்ல தடை விதிப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உங்கள் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராமுக்குள் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது மார்ச் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தடைசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில், துபாய் மெட்ரோவில் பயணி ஒருவரின் இ-ஸ்கூட்டரில் இருந்து புகை கண்டறியப்பட்டதால், ஆன்பாஸிவ் (Onpassive) மெட்ரோ ரயில் நிலையத்தில் சேவைகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமானது. அதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதும் இந்த தடைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, கடந்த ஆண்டான 2023-இல் இ-ஸ்கூட்டர்களை கண்மூடித்தனமாக நிறுத்துவது, நடைபாதைகளைத் தடுப்பது மற்றும் சில பிரபலமான குடியிருப்பு பகுதிகளில் பார்க்கிங் இடங்களை ஆக்கிரமிப்பது போன்ற ஏராளமான புகார்களை குடியிருப்பாளர்கள் RTA விடம் முன்வைத்திருந்தனர்.

இதன் விளைவாக, சில குடியிருப்பு கட்டிடங்களும், பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வாடகைக்கு தங்கியிருப்பவர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இ-ஸ்கூட்டர்களை கொண்டு வர தடை விதித்திருந்தது.

ADVERTISEMENT

துபாயில் தற்போது வரை 63,500 இ-ஸ்கூட்டர் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் துபாய் குடியிருப்பாளர்கள் மத்தியில் இ-ஸ்கூட்டர்கள் பயண்பாடானது பிரபலமான போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel