ADVERTISEMENT

அமீரக குடியிருப்பாளர்கள் சவுதி மற்றும் ஓமானின் இ-விசாக்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிகாட்டி இதோ..

Published: 29 Mar 2024, 11:24 AM |
Updated: 29 Mar 2024, 11:34 AM |
Posted By: Menaka

ஐரோப்பிய ஷெங்கன் விசா முறையால் ஈர்க்கப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றுலா விசா முறையை GCC நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், GCC உறுப்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் குடியிருப்பாளர்கள் இந்த நாடுகளுக்கிடையே மிக எளிதாக கூடிய விரைவில் பயணிக்கலாம்.

ADVERTISEMENT

ஆயினும், தற்போது அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள், மற்ற வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அல்லது வேறு காரணங்களுக்காக பயணிக்க விசா பெறுவது அவசியமாகும். அவ்வாறு பயணிக்கும் குடியிருப்பாளர்கள் இ-விசா சேவைகள் மூலம் தொந்தரவு இல்லாத பயணத்தை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சவுதி அரேபியா மற்றும் ஓமான் நாட்டிற்கு பயணிக்க விரும்பினால், தாங்களாகவே இ-விசாவிற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதற்கான செயல்முறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

சவூதி அரேபியா:

தற்சமயம், அமீரகக் குடிமக்கள் சுற்றுலா நோக்கங்களுக்காக சவுதி அரேபியாவிற்கு விசா இல்லாத பயணத்தை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், நாட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சவுதிக்கு செல்ல இ-விசாவிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளது. மேலும் இந்த விசா ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.

இந்த விசாவில் சவுதிக்கு செல்லும் நபர்கள் 90 நாட்கள் வரை இராஜ்ஜியத்தில் தங்கலாம். இது ‘சிங்கிள் என்ட்ரி இ-விசா’ மற்றும் ‘மல்ட்டிபிள் என்ட்ரி இ-விசா’ என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. சிங்கிள் என்ட்ரி இ-விசாவிற்கு 452 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தேவையான ஆவணங்கள்:

  1. வெள்ளை பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் புகைப்படம்.
  2. குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்.
  3. செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதியின் நகல் (UAE விசா).
  4. வங்கி தகவல்.
  5. தங்கும் இடம். (கட்டாயம் இல்லை)
  6. மின்னஞ்சல் முகவரி.
  7. உங்கள் பாதுகாவலர்களின் தொலைபேசி எண், இருப்பிடம் மற்றும் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் வயது குறைந்தவராக இருந்தால், மருத்துவ உதவி தேவைப்படுபவர் அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர்கள் தங்களின் பயணத்திற்கு முன்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

விசா விண்ணப்ப செயல்முறை:

  • முதலில் https://visa.mofa.gov.sa/Account/Loginindividuals என்ற லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். உங்களிடம் ஏற்கனவே அக்கவுண்ட இருந்தால் உள்நுழையவும் அல்லது புதிதாக அக்கவுண்டை உருவாக்கவும்.
  • அதன் பிறகு, விசா வகை, போக்குவரத்து முறை மற்றும் உங்களின் தனிப்பட்ட தகவல் போன்றவற்றை விண்ணப்பத்தில் நிரப்பவும்.
  • பின்னர், ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் UAE குடியிருப்பு விசா நகல் போன்ற ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • மேலும், தேவையான குடியிருப்புத் தகவலை உள்ளிட்டு, அனைத்து தகவல்களும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த இருமுறை சரிபார்க்கவும்.
  • தேவையான மருத்துவத் தகவலை உள்ளிட்டு, உங்களுக்கு ஏற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்.
  • இறுதியாக, டெபிட்/கிரெடிட் கார்டு வழியாக இ-விசாவுக்கு கட்டணத்தைச் செலுத்தவும்.
  • உங்களுக்கான இ-விசாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் மின்னஞ்சல் வழியாக உங்கள் e-visa அனுப்பி வைக்கப்படும்.

ஓமான்:

அமீரகக் குடிமக்கள் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம், அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் ஓமானிற்கு பயணிக்க இ-விசாவைத் தேர்வு செய்யலாம். சுற்றுலாப் பயணிகள் ராயல் ஓமன் போலீஸ் இணையதளம் மூலம் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இந்த e-visa வில் பயணிப்பவர்கள் ஓமான் நாட்டில் 28 நாட்கள் வரை தங்க அனுமதி வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், கூடுதல் நாட்களுக்கு விசா காலத்தை நீட்டிக்கும் விருப்பமும் உள்ளது. ஓமானின் இந்த விசாவிற்கான கட்டணம் 5 ஓமான் ரியால்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையான ஆவணங்கள்:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (நுழைந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்)
  • வெள்ளை பின்னணியுடன் உள்ள சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம்
  • செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதியின் நகல் (UAE விசா)

விசா விண்ணப்ப செயல்முறை:

  • ராயல் ஓமன் போலீஸ் (ROP) eVisa இணையதளத்தில் கீழே சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான விருப்பம் இருக்கும்.
  • முதல் தடவையாக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் விபரங்களைப் பதிவிட்டு அக்கவுண்டை உருவாக்கவும்.
  • உள்நுழைந்ததும், “Apply for visa” மற்றும் “Apply for unsponsored visa” என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், தேவையான விவரங்களுடன் ஆன்லைன் விசா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • உங்கள் பாஸ்போர்ட்டின் டிஜிட்டல் நகல்கள், புகைப்படம் மற்றும் தேவையான எந்த ஆதார ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  • வழங்கப்பட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்தி விசா கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • உங்கள் விசா விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மின்னஞ்சல் வழியாக உங்கள் இ-விசா அனுப்பி வைக்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel