ADVERTISEMENT

UAE: ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கிய காவல்துறை…

Published: 10 Apr 2024, 9:09 AM |
Updated: 10 Apr 2024, 9:09 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கை செய்திகளை போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், அபுதாபி காவல்துறையின் ரோந்து அதிகாரிகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்க புதிய உத்தியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை சந்தித்து, ஈத் அல் ஃபித்ருக்கான இனிப்புகள், ரோஜாக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கியதுடன் பண்டிகை விடுமுறையின் போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அதிவேகமாக வாகனம் ஓட்டி கொண்டாட்டங்களை சோகமாக மாற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்புகளைப் பின்பற்றவும், கார் ஓட்டும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும், சீட் பெல்ட் அணியவும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பின் இருக்கையில் குழந்தை இருக்கையைப் பயன்படுத்துமாறும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குனரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் மஹ்மூத் யூசப் அல் பலுஷி (Mahmoud Yousef Al Balushi) அவர்கள் பேசுகையில், ஈத் பெருநாளை முன்னிட்டு ஓட்டுநர்கள் மற்றும் சாலை பயனர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மற்றும் ஈத் பண்டிகையின் உற்சாக மிகுதியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், அபுதாபி, அல் அய்ன், அல் தஃப்ரா மற்றும் வெளிப்புற பகுதிகளின் கிளைகளிலிருந்து வரும் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கல்வித் துறை (Traffic Awareness and Education Department) அல் அய்ன் நகரில் விழிப்புணர்வு முயற்சியை செயல்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு வீடியோவை இயக்க மொபைல் போன்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட QR குறியீடு கொண்ட விழிப்புணர்வு கையேடுகளை விநியோகிப்பதும் இதில் அடங்கும்.

அத்துடன் ரமலான் மாதத்தில் அபுதாபி எமிரேட் சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கக்கூடிய நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் காலை மற்றும் மாலை போக்குவரத்து உச்ச நேரங்கள் ரமலானுக்கு முன்பு இருந்த வழக்கமான நேரத்திற்கு திரும்புவதாகவும் அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

இது பற்றிய ஜெனரல் அல் பலுஷியின் கூற்றுப்படி, அபுதாபியில் காலை 6:30 முதல் 9 மணி வரையிலும், மாலை 3 முதல் 6 மணி வரையிலும், அல் அய்ன் நகரில் காலை 6:30 முதல் 8:30 வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் போக்குவரத்து உச்ச நேரங்கள் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நேரங்கள் பீக் ஹவர்ஸின் போது முக்கிய சாலைகளில் டிரக்குகளின் இயக்கத்தை தடை செய்கிறது. மேலும், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும், ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel