ADVERTISEMENT

UAE: கடந்த மாதம் பெய்த கனமழையால் மட்டும் 50,000 வாகனங்கள் சேதம்.. வாகன உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியீடு..!!

Published: 3 May 2024, 4:50 PM |
Updated: 3 May 2024, 4:50 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த, வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் நாடு முழுவதும் ஏராளமான வாகனங்களை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கியது. இதனால் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை பழுதுபார்ப்பது என்பது வாகன உரிமையாளர்களுக்கு ஒரு சவாலான விசயமாக உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் சந்தை மற்றும் நுகர்வோர் புலனாய்வு நிறுவனமான NIQ-GfK புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 66 சதவிகித வாகன ஓட்டிகள் சேதமடைந்த கார்களை இப்போது சரிசெய்ய இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஒரு புதிய வாகனத்தை வாங்க திட்டமிடுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், 22 சதவீத கார் உரிமையாளர்கள் சேதத்தை மதிப்பிட்டு புதிய வாகனம் வாங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு துபாய், ஷார்ஜா மற்றும் பிற வடக்கு அமீரகத்தில் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் 22 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது தொடர்பாக NIQ-GfK இன் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “துபாயில் சமீபத்தில் பெய்த கனமழை, அமீரகத்தின் ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது. வானிலை காரணமாக பலர் டீலர்ஷிப் அல்லது சர்வீஸ் சென்டர்களுக்கு செல்ல முடியவில்லை. இது கார் விற்பனை மற்றும் பராமரிப்பு சந்தையை பெரிதும் பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ‘Guy Carpenter’ நடத்திய ஆய்வில், ஏப்ரல் 16 அன்று அமீரகத்தைத் தாக்கிய வரலாறு காணாத பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 30,000 முதல் 50,000 வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் சாலைகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் சூழ்ந்த மழை வெள்ளத்தால் தங்கள் வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

பொதுவாக, மூன்றாம் தரப்பு பொறுப்புக் கொள்கைகள் (third-party liability policies) இயற்கை பேரழிவுகளை கவரேஜ் செய்யாது என்பதால் விரிவான இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களால் பாதுகாக்கப்படும். இது குறித்து கார்ஸ் 24 இன் வளைகுடா பிராந்தியத்திற்கான CEO கூறும் போது, நீரில் மூழ்கிய கார்களில் 20 முதல் 25 சதவீதம் வரை கடுமையான சிக்கல்கள் அல்லது சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கார் உரிமையாளர்கள் இப்போது பழுதுபார்க்கக்கூடிய கார்களை தக்க வைத்துக் கொள்வார்கள் என்றும், பின்னர் அடுத்த 6 முதல் 12 மாதங்களில், இந்த சேதமடைந்த கார்களில் பெரும்பாலானவை மீண்டும் சந்தைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel