ADVERTISEMENT

300 கிமீ தூரம்.. 200 கிமீ வேகம்.. UAE-ஓமான் பயணிகள் ரயில் சேவைக்கு கையெழுத்தான ஒப்பந்தம்..!!

Published: 11 May 2024, 8:16 AM |
Updated: 11 May 2024, 8:16 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் 303 கிமீ ரயில்வே நெட்வொர்க் திட்டத்தைத் தொடங்க அபுதாபியில் உள்ள முபதாலா இன்வெஸ்ட்மென்ட் (Mubadala Investment) நிறுவனத்துடன், எதிஹாட் ரயில் மற்றும் ஓமன் ரயில் நிறுவனங்கள் $3 பில்லியன் மதிப்புள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தமானது, ஓமானின் சுல்தான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்த போது கையெழுத்தாகியுள்ளது. மேலும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் பிரதித் தலைவரும், எதிஹாட் ரெயிலின் தலைவருமான ஷேக் தியாப் பின் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Theyab bin Mohamed bin Zayed Al Nahyan) பங்குதாரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.

UAE – ஓமான் கூட்டு ரயில் நெட்வொர்க் திட்டத்தின் கட்டுமானம் மொத்தம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொடங்கப்படும் என்றும், இந்த நெட்வொர்க் இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த ரயில் நெட்வொர்க் வர்த்தக துறைமுகங்களை இரு நாடுகளுக்குள் உள்ள ரயில்வேயுடன் இணைப்பதன் மூலம், எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கும் என்றும், ஒரு சரக்கு ரயில் பயணம் 15,000 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை அதாவது சுமார் 270 நிலையான கண்டெய்னர்களைக் கொண்டு செல்ல முடியும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், இவ்விரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்படவுள்ள இந்த பயணிகள் ரயில் சேவையானது, இரு நாட்டு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை இணைப்பதன் மூலம், சமூக மற்றும் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் எனவும், அதே நேரத்தில் சுற்றுலாத் துறையையும் இது ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, பயணிகள் ரயில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை எட்டும், சோஹர் மற்றும் அபுதாபி இடையேயான தூரத்தை 100 நிமிடங்களிலும், சோஹார் மற்றும் அல் அய்னுக்கு 47 நிமிடங்களிலும் கடந்து செல்லும், மேலும் ஒரு ரயிலில் 400 பயணிகள் வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் சுல்தானகத்திற்கும் அமீரகத்திற்கும் இடையில் நீண்டு பரவி கிடக்கும் ஜெபல் ஹஃபீத் மலைத்தொடருக்கு மரியாதை செலுத்தும் வகையில், முன்பு ஓமன்-எதிஹாட் ரயில் நிறுவனம் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் இனி ஹஃபீத் ரயில் என்று அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுரங்கம், இரும்பு மற்றும் எஃகு, விவசாயம் மற்றும் உணவு, சில்லறை வணிகம், இ-காமர்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை போன்ற இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்த ஹஃபீத் ரயி்ல் திட்டம் பெரும் பங்களிக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெபல் ஹஃபீத் மலைத்தொடரானது இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது, மேலும் மலைகள், பாலைவனங்கள் மற்றும் தனித்துவமான சுண்ணாம்பு அமைப்புகளை உள்ளடக்கிய அதன் கரடுமுரடான நிலப்பரப்பின் மூலம் இரு அண்டை நாடுகளுக்கு இடையே இந்த மலைத்தொடர் இணைப்பாக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel