உலகின் இரண்டாவது மிகப்பெரிய வணிக வளாகமான துபாய் மால் டோல் ஆப்பரேட்டரான சாலிக் நிறுவனத்துடன் இணைந்து வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டண பார்க்கிங்கை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. துபாய் மால் வெளியிட்ட அறிவிப்பின் படி, புதிய கட்டண பார்க்கிங் அமைப்பு கிராண்ட் பார்க்கிங், சினிமா பார்க்கிங் மற்றும் ஃபேஷன் பார்க்கிங் ஆகியவற்றிற்கு பொருந்தும் என்றும், அதே நேரத்தில் ஜபீல் மற்றும் பவுன்டைன் வியூஸ் பார்க்கிங் இடங்கள் இலவசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் வார நாட்களில், முதல் நான்கு மணி நேரத்தில் இலவச பார்க்கிங்கை அனுபவிக்கலாம் என்றும், பின்னர் வாகனம் நிறுத்துவதற்கு 20 திர்ஹம்ஸ் முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரஇறுதி நாட்களில் முதல் ஆறு மணிநேரம் இலவசமாக அணுக முடியும், கூடுதலாக நிறுத்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கட்டணம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் மாலில் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடம் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வார நாட்கள்:
- 0-4 மணிநேரம் : இலவசம்
- 4-5 மணிநேரம் : 20 திர்ஹம்ஸ்
- 5-6 மணிநேரம் : 60 திர்ஹம்ஸ்
- 6-7 மணிநேரம் : 80 திர்ஹம்ஸ்
- 7-8 மணிநேரம் : 100 திர்ஹம்ஸ்
- 8 மணி நேரத்தை விட அதிக நேரம்: 200 திர்ஹம்ஸ்
- 12 மணி நேரத்தை விட அதிக நேரம்: 500 திர்ஹம்ஸ்
- 24 மணி நேரத்தை விட அதிக நேரம்: 1,000 திர்ஹம்ஸ்
வாரயிறுதி நாட்கள்:
- 0-4 மணிநேரம் : இலவசம்
- 4-5 மணிநேரம் : இலவசம்
- 5-6 மணிநேரம் : இலவசம்
- 6-7 மணிநேரம் : 80 திர்ஹம்ஸ்
- 7-8 மணிநேரம் : 100 திர்ஹம்ஸ்
- 8 மணி நேரத்தை விட அதிக நேரம்: 200 திர்ஹம்ஸ்
- 12 மணி நேரத்தை விட அதிக நேரம்: 500 திர்ஹம்ஸ்
- 24 மணி நேரத்தை விட அதிக நேரம்: 1,000 திர்ஹம்ஸ்
இதற்கு முன்னதாக, கடந்த 2023 டிசம்பரில், தடுப்பு இல்லாத அமைப்புடன் (barrier free system) சாலிக்கின் ஒத்துழைப்புடன் துபாய் மாலில் கட்டண பார்க்கிங் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாலில் 13,000க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, சாலிக் நிறுவனம் Emaar மால்களுடன் ஒத்துழைப்பை அறிவித்தது. இந்த கூட்டாண்மை மாலுக்கு செல்லும் நபர்களுக்கு ஒரு தடையற்ற மற்றும் திறமையான பார்க்கிங் மேலாண்மை அமைப்பை வழங்கும் என கூறப்படுகின்றது.
மேலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், மாலுக்கு செல்பவர்கள் ஒரு மென்மையான, தடையற்ற பார்க்கிங் அனுபவத்தை செயல்படுத்த சாலிக்கின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் கட்டண பார்க்கிங் அறிமுகமானது, ஓட்டுநர்கள் விரைவாகவும் எளிதாகவும் பார்க்கிங்கைக் கண்டறிய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து எமார் பிராப்பர்டீஸின் அகமது அல்மத்ரூஷி பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு, எங்கள் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், சில்லறை மற்றும் ஓய்வுநேரங்களில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பேரியர் (barrier) தேவையை நீக்கும் புதுமையான மற்றும் வசதியான தீர்வுகளை வழங்குவதற்கான அவர்களின் லட்சியத்திற்கு ஏற்ப உள்ளதாக சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாத் தெரிவித்துள்ளார்.
பார்க்கிங் கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?
துபாய் மாலில் டிக்கெட் இல்லாத பார்க்கிங்கிற்கான தானியங்கி கட்டணம் கார்களில் உள்ள நம்பர் ப்ளேட்டை கண்டறிந்து வசூலிக்கப்படும். தடையற்ற பார்க்கிங் அமைப்பு (barrier free parking system), அதே தானியங்கி நம்பர் ப்ளேட் அங்கீகாரம் மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலிக் டேக்குகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
வாகனம் பார்க்கிங் தளத்திற்குள் நுழையும் போது ஒரு கேமரா காரின் பிளேட் எண்ணைப் படம்பிடித்து, நுழைவு நேரத்தைப் பதிவு செய்யும். வெளியேறும் போது, கேமரா மீண்டும் பிளேட் எண்ணை ஸ்கேன் செய்யும், மொத்த பார்க்கிங் நேரத்தை கணினி கணக்கிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel