ADVERTISEMENT

விசிட் விசாவில் UAE வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பயண ஆலோசனைகள்..!!

Published: 19 Jun 2024, 7:04 PM |
Updated: 19 Jun 2024, 7:04 PM |
Posted By: Menaka

இந்தியாவிலிருந்து விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா போன்ற இந்தியாவின் சில விமான நிறுவனங்கள் முக்கியமான பயண வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இது தொடர்பாக இந்தியா மற்றும் அமீரகத்தில் உள்ள பயண முகவர்களுக்கு விமான நிறுவனங்கள் வழங்கிய அறிவுரையில், இந்திய நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும்போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முக்கியமாக, செல்லுபடியாகும் பாஸ்போர்ட், திரும்புவதற்கான டிக்கெட்டுகள், தங்குமிட விவரங்கள் மற்றும் நிதி ஆதாரம் ஆகியவற்றைக் கொண்டு செல்லுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் விமான நிறுவனங்களின் பயண ஆலோசனைகளின் படி, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் நுழைவுத் தேதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், உறுதி செய்யப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட், உறுதி செய்யப்பட்ட ஹோட்டல் முன்பதிவுக்கான சான்று, 1 மாத விசாவிற்கு 3,000 திர்ஹம்ஸ் மற்றும் நீண்ட காலம் தங்குவதற்கு 5,000 திர்ஹம்ஸ் வரையிலான நிதிச் சான்று மற்றும் அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் கூடுதல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று இந்தியாவின் மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பயண முகவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு சுற்றறிக்கையின்படி, அமீரகம் செல்லும் பயணிகள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்லுமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் நாடுகடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும்  விமான நிறுவனம் பயணிகளை எச்சரித்துள்ளது.

அதேசமயம், தேவையான ஆவணங்கள் இல்லாத பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் விமானங்களில் ஏறுவதற்கு மறுக்கப்படுவார்கள் எனவும், மேலும் அது தொடர்பான அனைத்து கட்டணங்களும் டிக்கெட் ஏஜென்சியிடம் பற்று வைக்கப்படும் என்றும் ஸபெஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், விமான நிலையத்தின் செக்-இன் கவுன்டர்களில் பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள், அப்போது போதிய ஆவணங்கள் இல்லையென்றால், அவர்களுக்கு நுழைவு மறுக்கப்படுகிறது, அவ்வாறு நுழைவு மறுக்கப்படும் நிலையில் பயணிகளை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்வது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும் என்பதால்,  போர்டிங் பாஸ் வழங்குவதற்கு முன்பு அவர்கள் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதாக பயண முகவர்களும் கூறுகின்றனர்.

எனவே, விமான நிறுவனங்களின் இந்த அறிவுரையைத் தொடர்ந்து, பயண நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், தேவையான அனைத்து ஆவணங்களும் பயணிகளிடம் இருப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel