ADVERTISEMENT

துபாயின் முதல் ’ஏர் டாக்ஸி ஸ்டேஷன்’.. தொடங்கிய கட்டுமானம்.. எங்கு தெரியுமா?

Published: 13 Nov 2024, 7:39 PM |
Updated: 13 Nov 2024, 7:59 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் போக்குவரத்து தீர்வுகளில் ஒன்றான ஏர் டாக்ஸி சேவை விரைவில் எமிரேட்களுக்கு இடையே இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது பறக்கும் டாக்ஸி தரையிறங்குவதற்கான வெர்ட்டிபோர்ட்களை (vertiports) கட்டும் பணி துபாயில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பின்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே முதல் ஏர் டாக்ஸி நிலையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் ஷேக் ஹம்தான் பதிவிட்டுள்ள இடுகையில், “துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் துபாயின் முதல் ஏர் டாக்ஸி வெர்டிபோர்ட்டை நாங்கள் கட்டத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்ததுடன் “துபாய் புதுமை, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அதன் உறுதியான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைக்கிறது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அந்த பதிவில், 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த நிலையம் ஆண்டுதோறும் 42,000 தரையிறக்கங்களையும் சுமார் 170,000 பயணிகளையும் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்பதையும், முதல்கட்டமாக DXB உட்பட டவுன்டவுன், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமேரா ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் சேவைகள் 2026 இல் தொடங்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேம்பட்ட ஏர் டாக்ஸி வெர்டிபோர்ட் நெட்வொர்க் மூலம் நகர்ப்புற வான்வழி போக்குவரத்தை வழங்கும் உலகின் முதல் நகரமாக துபாயை உருவாக்க இந்த முயற்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வெளியான செய்திகளின் படி, முதல் ஏர் டாக்ஸி நிலையத்தின் அதிகாரப்பூர்வ செயல்பாடு 2026 முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நான்கு நிலையங்களின் ஆரம்ப தொடக்கமும் அடங்கும்.

ADVERTISEMENT

சேவையின் முதல் கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமேரா ஆகிய நான்கு மூலோபாய வெர்டிபோர்ட்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Image used for illustrative purpose. Photo: File

அவை Skyports உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் மற்றும் பிரத்யேகமான புறப்படும் மற்றும் தரையிறங்கும் பகுதிகள், மின்சார சார்ஜிங் வசதிகள், பிரத்யேக பயணிகள் பகுதி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏர் டாக்ஸி சேவையானது துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாம் ஜுமேரா வரையிலான பயண நேரத்தை 10-12 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பீக் நேரங்களில் 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னணி சர்வதேச ஆபரேட்டர்களுடன் இணைந்து, ஜாபி ஏவியேஷன் (Joby Aviation) விமான உற்பத்தி, செயல்பாடுகள் மற்றும் பயணிகள் இயக்கத்தை நிர்வகிக்கும், அதே நேரத்தில் ஸ்கைபோர்ட்ஸ் வெர்டிபோர்ட்டின் உள்கட்டமைப்பின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டை மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. மற்ற போக்குவரத்து முறைகளுடன் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு RTAவின் பொறுப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: @HamdanMohammed/X

பறக்கும் டாக்ஸியின் அம்சங்கள்

Joby S4 பறக்கும் டாக்ஸியானது செங்குத்தாக புறப்படுதல் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டது, மேலும் பூஜ்ஜிய உமிழ்வுகளுடன் நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனமாக செயல்படுகிறது.

பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் வேகத்திற்கு பெயர் பெற்ற இந்த ஏர் டாக்ஸி ஆறு ரோட்டர்கள் மற்றும் நான்கு பேட்டரி பேக்குகளுடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இவை அதிகபட்சமாக 321கிமீ வேகத்தில் 161 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் என்று கூறப்படுகிறது. நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட் திறன் கொண்ட இந்த பறக்கும் டாக்ஸி பாரம்பரிய ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைவான சத்தத்தை உருவாக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Photo: @HamdanMohammed/X

சேவை துவக்கம்

RTA ஆனது பறக்கும் டாக்ஸி சேவையைத் தொடங்க இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜெனரல் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (GCAA), துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (DCAA), இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்கைபோர்ட்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்,  அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜோபி ஏவியேசன் ஆகியோருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel