அபுதாபியில் வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதியன்று எர்த் அபுதாபியில் (Erth Abu Dhabi), 23வது சையத் சாரிட்டி ரன் (Zayed Charity Run) என்கிற பந்தயம் நடக்க உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு வயதினரைச் சேர்ந்த சுமார் 9,000 பங்கேற்பாளர்கள் பதிவு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 7 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான 10 கிமீ ஓட்டப்பந்தயமும், அதைத் தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்கான 10 கிமீ தூர பந்தயமும் மற்றும் கூடுதல் பிரிவுகளின் கீழ் பல்வேறு ஓட்டப் பந்தயங்களும் காலை முழுவதும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தயம் முடிந்ததும், காலை 9 மணிக்கு விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்திற்கு 1.5 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை அறிவித்துள்ள அபுதாபி, இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறைபாடுள்ளவர்க்ளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
பந்தயத்தை முன்னிட்டு, பார்க்கிங் மற்றும் ஷட்டில் பேருந்து சேவைகள் வஹாத் அல் கராமாவில் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும், சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் அதிகாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் வழங்கப்படும். அத்துடன் ஓட்டப்பந்தயம் நடைபெறும் சாலைகள் காலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல் தஃப்ரா பிராந்தியத்தின் ஆட்சியாளரின் பிரதிநிதியான ஷேக் ஹம்தான் பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவின் கீழ் நடைபெறவுள்ள இந்த ஓட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக 23வது சையத் சாரிட்டி ரன்னுக்கான உயர் ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே, 1.5 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஓட்டப்பந்தயத்திற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு, இதில் பங்கேற்க விரும்பும் குடியிருப்பாளர்கள் தங்கள் பதிவை இறுதி செய்யுமாறும் ஏற்பாட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel