ஐக்கிய அரபு அமீரகம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அதன் 53வது தேசிய தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் இந்தாண்டின் கடைசிப் பொது விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். இது தொடர்பாக அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
MoHRE வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வருவதால், அமீரக மக்கள் சனி, ஞாயிறு வார இறுதியுடன் சேர்த்து நான்கு நாள் இடைவெளியை அனுபவிப்பார்கள். இருப்பினும் சனி வேலை நாளாக இருக்கும் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அறிவிப்பு 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் குறித்த அமைச்சரவை முடிவோடு சீரமைக்கப்பட்ட MoHRE சுற்றறிக்கையில் வந்துள்ளது. இதற்கு முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பொதுத் துறை ஊழியர்களுக்கும் இதே விடுமுறைகளை அமீரக அரசாங்கம் அறிவித்தது.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையானது அனைத்து ஊழியர்களும் ஆண்டு முழுவதும் சம எண்ணிக்கையிலான இடைவெளிகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் 1971 ஆம் ஆண்டில் ஒரு நாடாக ஒன்றிணைந்ததைக் நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 அன்று தேசிய தினத்தை அமீரகம் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரப்பூர்வ விழா அல் அய்னில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel