துபாயில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், துபாயின் முக்கிய சாலைகளில் ஒன்றான எமிரேட்ஸ் சாலையில் (E611) டிரக் போக்குவரத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த இருப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்திலையில் இந்த புதிய கட்டுப்பாடானது வரும் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரவிருப்பதாக RTA அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்ட அறிவிப்பில், துபாயில் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை எமிரேட்ஸ் சாலையில் டிரக் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதுடன், சாலை பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் மற்றும் நியமிக்கப்பட்ட தெருக்களில் தனியார் வாகனங்களுக்கான சாலை திறனை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
மேலும், துபாயில் உள்ள முக்கிய சாலைகளில் டிரக் இயக்கத் தடையை விரிவுபடுத்துவதற்கான அதிகாரத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து RTA வில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் CEO ஹுசைன் அல் பன்னா பேசிய போது, இந்த தடை எமிரேட்ஸ் சாலையில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும், மேலும் டிரக் போக்குவரத்தை மாற்று வழிகளுக்கு மறுபகிர்வு செய்யும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தடைசெய்யப்பட்ட பகுதியின் தொடக்கத்திலும் முடிவிலும் தகவல் மற்றும் திசை அடையாளங்கள் வைக்கப்படும், அவை மீடியா புல்லட்டின்கள், பல்வேறு தளங்களில் விளம்பரங்கள், சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் உள்ளூர் நிலையங்களில் ஒளிபரப்பப்படும் பன்மொழி வானொலி செய்திகள் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம், துபாயின் மற்றொரு முக்கிய சாலையான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (E311) காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸில் விரிவாக்கப்பட்ட டிரக் இயக்கத் தடை RTA ஆல் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தடையானது எமிரேட்ஸ் சாலையிலும் ஷார்ஜாவை நோக்கி செல்லும் பாதையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், துபாயின் அல் இத்திஹாத் மற்றும் மைதான் ஸ்ட்ரீட்ஸ் போன்ற முக்கிய சாலைகளில் டிரக் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஷேக் சையத் சாலை (E11) மற்றும் ஷார்ஜாவிற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளான அல் மிசார், அல் முஹைஸ்னா மற்றும் அல் முதீனா உள்ளிட்ட பிற சாலைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 16 மணி நேர தடை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவை தவிர, நடுத்தர நெரிசல் உள்ள நகர்ப்புறங்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் டிரக் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இதில் விமான நிலையம், ஓமன் மற்றும் டமாஸ்கஸ் வீதிகள் அடங்கும். இந்த சாலைகளில் காலை 6.30 முதல் 8.30 வரையிலும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மற்றும் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் டிரக் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர்கள் கவனத்திற்கு!!
துபாய் காவல்துறையின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவி கமாண்டன்ட் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், புதிய கட்டுப்பாட்டு நேரங்கள் குறித்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவன உரிமையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை RTA உடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்ததுடன், தண்டனைகள் மற்றும் பிற அபராதங்களைத் தவிர்க்க இந்த நேரங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel