ADVERTISEMENT

துபாயில் ட்ரோன் டெலிவரி சேவை அதிகாரப்பூர்வமாக தொடக்கம்..!! முதல் டெலிவரியை பெற்ற துபாய் இளவரசர்…!!

Published: 18 Dec 2024, 3:29 PM |
Updated: 18 Dec 2024, 3:38 PM |
Posted By: Menaka

துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் ட்ரோன் மற்றும் பறக்கும் கார்கள் போன்ற புதிய போக்குவரத்து முறைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ட்ரோன் டெலிவரி சேவைக்கான சோதனைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த ட்ரோன் டெலிவரி சேவையை துபாய் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி துபாயானது நேற்று செவ்வாய்க்கிழமை அதன் முதல் வகையான ட்ரோன் டெலிவரி சேவைகளை தொடங்கியது. செவ்வாயன்று துபாயில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA) ட்ரோன் போக்குவரத்தை செயல்படுத்த கீட்டா ட்ரோனுக்கு (Keeta Drone) முதல் உரிமத்தை வழங்கியுள்ளது, இந்த நிறுவனம் சீன தொழில்நுட்ப நிறுவனமான Meituan இன் ஒரு பகுதியாகும்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், துபாய் விமான நிலையங்களின் தலைவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி மற்றும் துபாய் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆரம்ப கட்டத்தில் ஆறு ட்ரோன்களுடன் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் (DSO) பகுதியில் இந்த டெலிவரி சேவையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் நான்கு செயல்பாட்டு ட்ரோன் டெலிவரி வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (RIT-துபாய்) மற்றும் துபாய் டிஜிட்டல் பார்க் போன்ற முக்கிய இடங்களுக்குச் சேவை செய்யும் என்றும், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் ஆட்சியாளரின் ஆர்டரை டெலிவரி செய்த ட்ரோன்

துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், மத்திய கிழக்கின் முதல்-வகையான ட்ரோன் டெலிவரி சேவையை  துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் தொடங்கி வைத்த பிறகு, முதல் ஆர்டரை செய்து டெலிவரி பெற்றுள்ளார். இப்பகுதியில் உள்ள டேக்-ஆஃப் பகுதிகளின் ஒன்றிலிருந்து ஆர்டர் வெற்றிகரமாக ட்ரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்டது.

Photo: Screengrab/Dubai Media Office

இதையடுத்து உரையாற்றிய அல் மக்தூம், “ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ட்ரோன் தொழில்நுட்பத்தின் நேர்மறையான பயன்பாட்டை ஊக்குவிக்க UAE ட்ரோன்களை ‘Good Award’ க்கு அறிமுகப்படுத்தினோம். இன்று, ட்ரோன் விநியோக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான செயல்பாட்டுத் தயார்நிலையுடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

துபாய் முழுவதும் விரிவடையும்

2030 ஆம் ஆண்டுக்குள் ட்ரோன் டெலிவரி சேவையானது துபாயில் 33 சதவீதத்தை எட்டும் என்று கூறிய DCAAயின் இயக்குனர் ஜெனரல் முகமது அப்துல்லா லெங்காவி அவர்கள், ட்ரோன் டெலிவரி முறை முற்றிலும் பாதுகாப்பானது என்று வலியுறுத்தியுள்ளார்.

கூடுதலாக, சோதனைத் தேர்வுகளின் போது, ​​ட்ரோன் அமைப்பின் பேக்-அப் சிஸ்டம் உட்பட அனைத்து அளவுருக்களும் ஒன்றரை ஆண்டுகளாக சோதிக்கப்பட்டதாகவும், தரவு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான எந்த மாற்றங்களுக்கும் கீட்டா ட்ரோன் ஒத்துழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், முதல்கட்டமாக சிலிக்கான் ஒயாசிஸில் தொடங்கப்பட்ட இந்த சேவையை விரைவில்  மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும், அடுத்த கட்டத்திற்கான சிறந்த இடங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் லெங்காவி தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய, Meituan இன் துணைத் தலைவரும், Keeta Drone இன் தலைவருமான யிநியன் மாவோ (Yinian Mao), நிறுவனம் சீனாவில் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாக விரிவுபடுத்திய பின்னர்,  துபாயில் நுழைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய போது, “துபாயின் தேவைக்கேற்ப டெலிவரி சேவைகளுக்கான அதிக தேவை மற்றும் அதன் தீவிர வானிலையால் ஏற்படும் செயல்பாட்டு சவால்கள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த ட்ரோன் டெலிவரிக்கான சாத்தியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. துபாய் GCC மற்றும் MENA பிராந்தியத்தில் உள்ள மற்ற பகுதிகளையும் ஊக்குவிக்கும் ஒரு முன்மாதிரி நகரமாகும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“ட்ரோன் டெலிவரி மூலம் எங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையை விரைவாகவும் அணுகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் முடியும். எதிர்காலத்தில், எங்களிடம் நீண்ட தூர ட்ரோன்கள் கிடைத்தவுடன், இரத்தம் மற்றும் இரத்த மாதிரிகளை எங்களால் கொண்டு செல்ல முடியும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபகீஹ் பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மொஹைமென் அப்தெல்கானி தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel