ADVERTISEMENT

துபாய்: ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் இருந்து அல் கைல் சாலைக்கு புதிய பிரிட்ஜ் திறப்பு… பயண நேரம் 3 நிமிடங்களாக குறையும் என தகவல்..!!

Published: 23 Dec 2024, 2:00 PM |
Updated: 23 Dec 2024, 2:07 PM |
Posted By: Menaka

துபாயில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை RTA ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இருவழிப் பாலம் பயண நேரத்தை 15 நிமிடங்களிலிருந்து 3 நிமிடங்களாகக் குறைக்கும் என்றும், 1,000 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், அல் கைல் ஸ்ட்ரீட்டிற்கு போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் RTA வெளியிட்டுள்ள தகவலின் படி, ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தில் ஷேக் சையத் சாலை, ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை, அல் அசயல் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலை ஆகிய நான்கு முக்கிய இன்டர்செக்‌ஷன் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டின் திறனை இரட்டிப்பாக்கும் என்றும், இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 8,000 வாகனங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 689 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 54 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், துபாயின் நகர மையத்திற்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கும் தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான ஷேக் சயீத் சாலையுடனான அதன் இன்டர்செக்‌ஷனில் இருந்து அல் கைல் சாலையுடன் அதன் இன்டர்செக்‌ஷன் வரை 4.5 கிமீ தொலைவில் பரவியுள்ள இத்திட்டம், அல் சுஃபு 2, அல் பர்ஷா ரெசிடென்ஷியல் ஏரியா மற்றும் ஜுமைரா வில்லேஜ் டிஸ்ட்ரிக்ட் உட்பட பல முக்கிய குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்கு சேவை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 2030 ஆம் ஆண்டளவில், இந்தத் திட்டத்தால் சேவை செய்யப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தொகை 640,000 குடியிருப்பாளர்களைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நான்கு இன்டர்செக்‌ஷன்

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, முதலாவது ஷேக் சையத் சாலையுடன் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டின் இன்டர்செக்‌ஷன் ஆகும், அங்கு துபாய் மெட்ரோவின் ரெட் லைனைக் கடந்து செல்லும் வகையில் இரண்டு-வழி திசை சரிவுப் பாதை (directional ramp) கட்டப்படும். இந்த சரிவுப் பாதை ஷேக் சையத் சாலையில் இருந்து ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் கிழக்கே எமிரேட்ஸ் சாலையை நோக்கி வலதுபுறம் திரும்பும் போக்குவரத்தை எளிதாக்கும்.

இரண்டாவது இன்டர்செக்‌ஷன் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மற்றும் ஃபர்ஸ்ட் அல் கைல் சாலையில் உள்ளது. அங்கு தற்போதுள்ள ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் பாலத்தில் இரு திசைகளிலும் பாதைகளின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்படும். மேலும், போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்க சிக்னல் செய்யப்பட்ட ஜங்க்‌ஷன் போக்குவரத்து மேம்பாடுகளும் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது இன்டர்செக்‌ஷன் ஹெஸ்ஸா மற்றும் அசயேல் ஸ்ட்ரீட்களில் உள்ளது. ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் உள்ள ஒவ்வொரு திசையிலும் தற்போதைய பாலத்தில் உள்ள பாதைகளை இரண்டிலிருந்து நான்காக விரிவுபடுத்தப்படுத்துவது, போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்த சிக்னல் செய்யப்பட்ட  ஜங்க்ஷனாக மேம்படுத்துவது ஆகியவை பணிகளில் அடங்கும்.

நான்காவது இன்டர்செக்‌ஷன் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலையில் உள்ளது. ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் இருந்து அல் கைல் சாலை வழியாக வடக்கு நோக்கி ஷார்ஜாவை நோக்கி தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இருவழி நேரடி வளைவை அமைப்பது இந்த பணிகளில் அடங்கும்.

சைக்கிளிங் மற்றும் ஸ்கூட்டர் தடங்கள்

மேற்கூறப்பட்ட இன்டர்செக்‌ஷன்களை தவிர, அல் சுஃபூவை ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் வழியாக துபாய் ஹில்ஸுடன் இணைக்கும் 13.5 கிமீ நீளமுள்ள சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இ-ஸ்கூட்டர் டிராக்குகள் கட்டப்படுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த டிராக்குகள் அல் பர்ஷா மற்றும் பர்ஷா ஹைட்ஸ் உட்பட பல குடியிருப்பு பகுதிகளுக்கு சேவை செய்யும் அன்று ஆணையம் தெரிவித்துள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள வணிக மற்றும் சேவை மையங்களுடன் இணைப்பதன் மூலம் அவை முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்தும்.

குறிப்பாக, ஒரு புதிய சைக்கிள் ஓட்டும் பாதையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் பாதசாரிகளுக்கும் ஐந்து மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பாலங்கள் இருக்கும். முதல் பாலம் ஷேக் சயீத் சாலையைக் கடக்கிறது, இரண்டாவது பாலம் அல் கைல் சாலையைக் கடக்கிறது. சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர் பாதைக்கு மூன்று மீட்டர் மற்றும் பாதசாரி பாதைகளுக்கு இரண்டு மீட்டர் என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்கின் திறன் ஒரு மணி நேரத்திற்கு 5,200 பயனர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் திறமையான பயன்பாட்டை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel