அபுதாபியில் சமீபத்தில் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் வாராந்திர இ-டிராவில் பல வருடங்களாக வாட்ச்மேன் ஆக பணிபுரியும் இந்தியர் ஒருவர் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தைச் சேர்ந்த நம்பள்ளி ராஜமல்லையா என்பவரே ஒரு மில்லியன் திர்ஹம்ஸை வென்ற வெற்றியாளர் ஆவார்.
அபுதாபியில் வசிக்கும் 60 வயதான ராஜமல்லையா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களிடமிருந்து பிக் டிக்கெட்டைப் பற்றி கற்றுக்கொண்டதாகவும், ஒரு குழுவில் சேர போதுமான பணத்தை சேகரிக்கும் போது மட்டுமே எப்போதாவது டிக்கெட்டுகளை வாங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு 20 நெருங்கிய நண்பர்களுடன் குழு சேர்ந்து மீண்டும் டிக்கெட் வாங்கத் தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முறை அதிர்ஷ்டம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. ஆம், டிசம்பர் மாதத்திற்கான பிக் டிக்கெட்டின் வாராத்திர மில்லியனர் இ-டிராவில், 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வெல்லும் வெற்றியாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அபுதாபியில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வரும் ராஜமல்லையா, நண்பர்களுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்ளப்போவதாகவும், மீதமுள்ள அவரின் பங்கை தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க சேமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து மேலும் அவர் பேசிய போது, “இது எனது முதல் வெற்றி, எனக்கு அழைப்பு வந்ததும், நான் முற்றிலும் மூழ்கிவிட்டேன். நான் உணர்ந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று கூறியதுடன், தொடர்ந்து பிக் டிக்கெட்டின் மாதாந்திர டிராவில் பங்கேற்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel