ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகின்ற பொது விடுமுறை நாளான ஜனவரி 1, 2025, புதன்கிழமையன்று பார்க்கிங் கட்டணம் இலவசம் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அறிவித்துள்ளது. அதேபோல் முசாஃபா M-18 (Musaffah M-18) என்ற டிரக் பார்க்கிங் இடத்திலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து, ஜனவரி 2, 2025 வியாழன் காலை 8 மணிக்கு கட்டண பார்க்கிங் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புத்தாண்டு விடுமுறையின் போது, வாகன ஓட்டிகள் எமிரேட்டில் உள்ள டார்ப் (Darb) டோல் கேட் அமைப்புகளை கட்டணமின்றி கடக்கலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின் படி, மீண்டும் ஜனவரி 2, 2025 வியாழன் அன்று, பீக் ஹவர்ஸ் (peak hours) ஆன காலை 7 முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் டோல் கேட் கட்டணம் செயல்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அபுதாபி மொபிலிட்டி, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடையூறான நடத்தைகளைத் தவிர்க்கவும் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் சரியாக வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை ரெசிடென்ஸ் பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொது விடுமுறையின் போது அபுதாபியில் இயக்கப்படும் பொதுப் பேருந்துகளின் நேர அட்டவணை மற்றும் செயல்பாடுகள், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் செயல்படும் நேரம் போன்றவற்றையும் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது. அதன் படி, வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் 2025இன் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி மூடப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி வியாழன் அன்று வழக்கமான வேலைநேரப்படி இயங்கும்.
புத்தாண்டு தினத்தன்று வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூடப்படும் போதிலும், வாடிக்கையாளர்கள் அபுதாபி மொபிலிட்டி இணையதளம் வழியாகவும், Darbi, Darb இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், அத்துடன் அபுதாபியில் டிஜிட்டல் அரசாங்க சேவைகளுக்கான TAMM தளம் மூலமாகவும் ஆன்லைனில் சேவைகளுக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் 24/7 சேவைகளைக் கோர நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற எண்ணிலோ அல்லது டாக்ஸி அழைப்பு மையத்தை 600535353 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அபுதாபியில் விடுமுறை நாட்களில் பொதுப் பேருந்து சேவைகளின் நேர அட்டவணையைப் பொறுத்தவரை, கூடுதல் பிராந்திய மற்றும் நகரங்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ளும் போது, வார இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் பின்பற்றப்படும் அட்டவணையின்படி பேருந்து சேவைகள் செயல்படும் என்று அபுதாபி மொபிலிட்டி தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் பொதுப் பேருந்துகளின் சேவை நேரத்தை அபுதாபி மொபிலிட்டியின் இணையதளத்தில் பார்வையிடலாம் அல்லது நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது Darbi ஸ்மார்ட் ஆப் மற்றும் கூகுள் மேப்ஸ் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel