துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) நடப்பு ஆண்டான 2025 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில், சுமார் 4.3 மில்லியன் பயணிகளை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 311,000 க்கும் அதிகமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் தினசரி போக்குவரத்து வெள்ளிக்கிழமையான இன்று (ஜனவரி 3) உச்சமாக இருக்கும் என்றும் DXB தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து DXB வெளியிட்ட அறிக்கையில், “இந்த விதிவிலக்கான செயல்திறன், பண்டிகைக் காலத்திற்குப் பிறகு, விடுமுறை நாட்களில் இருந்து திரும்பும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து சர்வதேச பார்வையாளர்களின் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
DXBயின் அறிக்கையின் படி, ஆண்டின் தொடக்கத்தில் தினசரி சராசரியாக 287,000 பயணிகள் விமான நிலையத்தைக் கடந்து செல்கிறார்கள். இது கடந்த ஆண்டான 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8 சதவீதம் அதிகமாகவும், 2018-19 ஆகிய ஆண்டுகளை விட 6 சதவீதம் அதிகமாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம், DXB பரபரப்பாக இயங்கி வருகின்றது. இது உலகளாவிய பயணத் தேவையை திறமையாகவும் எளிதாகவும் பூர்த்தி செய்யும் திறனை வெளிப்படுத்துகிறது என்று விமான நிலையம் மேலும் கூறியுள்ளது.
சுமூகமான பயணத்திற்கான குறிப்புகள்
இத்தகைய உச்ச காலத்தில் பயணிகள் சுமூகமான பயணத்திற்கு முன்கூட்டியே திட்டமிடவும், பயண விதிகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக விமான நிலையம் அறிவித்துள்ள விதிகளில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.:
- இதுபோன்ற போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில் டெர்மினல்களுக்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், வீட்டிலேயே குடும்பத்தினர் மற்றும் உறவினரிடமிருந்து விடைபெற்றுக்கொள்ள வேண்டும்.
- 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை விரைவுபடுத்தலாம்.
- உங்கள் லக்கேஜ்களை இருமுறை சரிபார்க்கவும்
- ஹேன்ட் லக்கேஜ்களில் உலோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்களை வைக்கவும் மற்றும் திரவ, ஏரோசோல்கள் மற்றும் ஜெல்களின் விதிமுறைகளைப் பின்பற்றவும்
- அனுமதிக்கப்பட்ட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், பவர் பேங்க்கள் மற்றும் உதிரி பேட்டரிகள் செக்-இன் லக்கேஜ்களில் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் அவை ஹேன்ட் லக்கேஜ்களில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
- முன்கூட்டியே, பயண ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி, இந்தத் தேவைகள் அனைத்தையும் ஒழுங்கமைத்துக் கொள்ளவும்
- பேக்கேஜ் அலொவன்ஸ்களைச் சரிபார்க்கவும் மற்றும் கடைசிநேர பதற்றங்களைத் தவிர்க்க உங்கள் விமான நிறுவனத்தின் விதிமுறைகளைப் பற்றி அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel