ADVERTISEMENT

ஷார்ஜா: பிப்ரவரி முதல் பொது பார்க்கிங் இடங்கள் கட்டணத்திற்கு உட்படுத்தப்படும்!! கல்பா முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பு…

Published: 15 Jan 2025, 2:28 PM |
Updated: 15 Jan 2025, 5:08 PM |
Posted By: Menaka

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள கல்பா நகரில் வருகின்ற பிப்ரவரி 1 முதல் பொது பார்க்கிங் இடங்களில் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்பா முனிசிபாலிட்டி மற்றும்  ஷார்ஜா நகரின் முனிசிபாலிட்டி ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையானது, பார்க்கிங்கை ஒழுங்குபடுத்துவதையும் அதன் தவறான பயன்பாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து கல்பா முனிசிபாலிட்டியின் இயக்குனர் டாக்டர் அஹ்மத் சயீத் அல் மஸ்ரூயி அவர்கள் கூறுகையில், நகரத்தில் பல்வேறு திட்டங்கள் அதிகரித்து வருவதாகவும், அதேசமயம் கல்பா சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதால் பார்க்கிங் இடங்களுக்கான தேவையை அதிகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது வாகன நிறுத்தத்தை கட்டணத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கையானது, தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நகரத்திற்கு வெளியே இருந்து வருபவர்களுக்கு பார்க்கிங் கண்டுபிடிக்கும் சிரமத்தைக் குறைத்தது என்றும் அல் மஸ்ரூயி விளக்கினார்.

ADVERTISEMENT

அதிகாரி வெளியிட்ட அறிவிப்பின் படி, பொது பார்க்கிங் அமைப்பு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும், நீல நிற தகவல் அறிகுறிகளால் அடையாளம் காணக்கூடிய இந்த பார்க்கிங் பகுதி வாரம் முழுவதும் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் இடங்களைத் (7 days parking zones) தவிர, வெள்ளிக்கிழமை மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் இது இலவசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியின் இயக்குனர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி அவர்கள் பேசிய போது, கல்பா நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 6,000 வாகன நிறுத்துமிடங்கள் கட்டணத்திற்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பார்க்கிங் பகுதியின் கட்டண விதிப்பு மற்றும் சேவை நேரங்களைக் குறிக்க ஐந்து பெரிய பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் 150 சிறிய பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், பணம் செலுத்துவதற்கான 68 சாதனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, SMS சேவை, ஷார்ஜா டிஜிட்டல் ஆப், மவாகிஃப் ஆப் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகள் உள்ளிட்ட பிற கட்டண முறைகளும் கிடைக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்பு ஒரு மணி நேர பார்க்கிங்கிற்கு 5 திர்ஹம்களாக இருந்த ஹேங்கிங் கார்டன் (Hanging Garden) சுற்றுலாத்தலத்தில் இப்போது 10 திர்ஹம்கள் கட்டணம் இருக்கும்என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel