ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மத்திய வங்கியின் (Central bank of united arab emirates – CBUAE) 50 வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில், அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சிறப்பு வெள்ளி நாணயம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
CBUAE இன் சாதனைகள் மற்றும் கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டின் வங்கி மற்றும் நிதித் துறையை வடிவமைக்க எவ்வாறு உதவியது என்பதை பிரதிபலிக்கும் அடையாளமாகத் திகழும் இந்த நாணயம் ஒவ்வொன்றும் 60 கிராம் எடை கொண்டவையாகும். தற்பொழுது, இந்த நாணயங்களில் மூவாயிரம் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தில் இடம்பெற்றுள்ள வடிவமைப்புகள்
CBUAE ன் இந்த சிறப்பு வெள்ளி நாணயத்தின் ஒரு புறத்தின் பிரதான வடிவமைப்பில் அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது அவர்களின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது, அதில் அரபி மொழியில் “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்’ என்ற சொற்றொடரும் மற்றும் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் மேல் மற்றும் கீழ் விளிம்புகளில், அரபு மற்றும் ஆங்கிலத்தில் 1973-2023 ஆண்டுகளில் ’50 Years of the Central Bank of the UAE’ என்ற சொற்றொடருடன், நடுப்பகுதியில் CBUAE கட்டிடத்தின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 திர்ஹம்ஸ் என்ற பெயரளவு மதிப்பும் இந்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நாணயத்தை எப்படி வாங்கலாம்?
CBUAE இன் புதிய டிஜிட்டல் சேவை மூலம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை வாங்கலாம். அதன் விலையில் விநியோக கட்டணமும் அடங்கும். இதேபோல, மற்ற நினைவு நாணயங்களும் அரசாங்க அதிகாரசபையின் இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கின்றன, அவற்றை பெற குடியிருப்பாளர்கள் UAE பாஸ் மூலம் உள்நுழையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel