ADVERTISEMENT

துபாய்: E311, ஷேக் சையத் ரோடில் 60% குறைந்த போக்குவரத்து நெரிசல்.. ஒரே ஆண்டில் 50 இடங்களில் RTA-வின் மேம்பாடுகள்..!!

Published: 13 Feb 2025, 8:25 AM |
Updated: 13 Feb 2025, 8:35 AM |
Posted By: Menaka

2024 ஆம் ஆண்டில் துபாய் முழுவதும் 50 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மேம்பாடுகளின் விளைவாக, பயண நேரங்கள் 10 நிமிடங்களிலிருந்து வெறும் 4 நிமிடங்களாகக் குறைந்து, முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஓட்டம் 60 சதவீத முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் வாகன ஓட்டிகள் கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலில் 35 மணிநேரத்தை இழந்துள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது. எனவே, இந்த புதிய மாற்றங்கள் ஓட்டுநர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த பயனளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுசைன் அல் பன்னா அவர்கள் பேசுகையில், 2024 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட போக்குவரத்து தீர்வுகள் சாலை நெட்வொர்க் செயல்திறனை மேம்படுத்துதல், வாகன ஓட்டத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் குறிப்படத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் பயண நேரங்களை 60 சதவீதம் வரை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளார். கூடுதலாக, இந்த மேம்பாடுகள் பல பகுதிகளில் சாலை திறனை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளன என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

2024 இல் மேற்கொள்ளப்பட்ட முக்கிய போக்குவரத்து மேம்பாடுகள்

RTA மேற்கொண்ட பயனுள்ள திட்டங்களில் அல் ரெபாத் ஸ்ட்ரீட்டிற்கு செல்லும் எக்ஸிட் 55 இன் விரிவாக்கமும் ஒன்றாகும், அங்கு பாதைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 600 மீட்டர் விரிவாக்கம் சாலை திறனை ஒரு மணி நேரத்திற்கு 4,500 வாகனங்களாக உயர்த்தியது மற்றும் பயண நேரங்களை 10 நிமிடங்களிலிருந்து வெறும் 4 நிமிடங்களாகக் குறைத்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, நாத் அல் ஷெபாவில், மேதான் ஸ்ட்ரீட்டில் இருந்து ஒரு புதிய என்ட்ரி மற்றும் எக்ஸிட் பாய்ண்ட்களை RTA அறிமுகப்படுத்தியது மற்றும் லத்தீஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட் மற்றும் நாத் அல் ஷபா ஸ்ட்ரீட் ஆகிய இரண்டு இன்டர்செக்‌ஷன்களை ஒரு ரவுண்டானாவாக மாற்றியது. இந்த மேம்பாடுகள் போக்குவரத்து இயக்கத்தை சீராக்கியதுடன் இப்பகுதிக்கு மேம்பட்ட அணுகலை வழங்கியது.

இவை தவிர, பெய்ரூட் ஸ்ட்ரீட்டை அகலப்படுத்துதல், அல் கவானீஜ் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் ஸ்ட்ரீட், அல் ரெபாட் ஸ்ட்ரீட்டிலிருந்து பிசினஸ் பே கிராசிங்கிற்கு பாதை விரிவாக்கங்கள், ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து எக்ஸிட் பகுதி விரிவாக்கம் அல் ரெபாத் ஸ்ட்ரீட், மற்றும் அல் கெயில் சாலையை மேதான் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் புதிய வழியை உருவாக்குதல் போன்றவை மேம்படுத்தப்பட்ட முக்கிய இடங்களில் அடங்கும் என்று அல் பனா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பள்ளி மண்டல மேம்பாடுகள்

2024-ஆம் ஆண்டில், துபாய் முழுவதும் 37 க்கும் மேற்பட்ட பள்ளிகளை உள்ளடக்கிய எட்டு பள்ளி போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களையும் ஆணையம் நிறைவு செய்துள்ளது. இவை பள்ளி மண்டலங்களில் பயண நேரங்களைக் குறைக்கும் போது சாலை செயல்திறன் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தியதன் மூலம், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மென்மையான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன.

“இந்த திட்டங்களில் பள்ளி மண்டலங்களைச் சுற்றி சாலைகளை விரிவுபடுத்துதல், கூடுதல் பார்க்கிங் இடங்களை உருவாக்குதல், என்ட்ரி மற்றும் எக்ஸிட் இடங்களை மேம்படுத்துதல் மற்றும் நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க போக்குவரத்து மாற்றுப்பாதைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, பீக் ஹவர்ஸ் போக்குவரத்து ஓட்டம் 20 சதவீதம் மேம்பட்டது” என்று அல் பன்னா மேலும் கூறியுள்ளார்.

உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் உள்ள கிங்ஸ் பள்ளி, துபாய் இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் உள்ள துபாய் காலேஜ், அல் சஃபா, அல் வர்கா 4, அல் குசைஸ், அல் மிசார், நாத் அல் ஷெபா மற்றும் அல் த்வார் 2 போன்ற இடங்களில் உள்ள பள்ளிகள் இந்த மேம்பாடுகளால் பயனடையும் குறிப்பிடத்தக்க பள்ளிகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த மேம்பாடுகளின் அடிப்படையில், RTA 2025 ஆம் ஆண்டில் 75 கூடுதல் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரியின் கூற்றுப்படி, இந்த திட்டமிடப்பட்ட மேம்பாடுகளில் பெரிய இன்டர்செக்சன்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் புதிய என்ட்ரி மற்றும் எக்ஸிட் பாய்ண்ட்களை உருவாக்குதல் மற்றும் பள்ளி மண்டலங்களில் தொடர்ச்சியான விரைவான போக்குவரத்து தீர்வுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்படத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel