ஐக்கிய அரபு அமீரகம் முழுவதுமே குளிர்ச்சியான வானிலை நிலவி வரும் பட்சத்தில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகின்றது. அதே போல் அமீரகம் முழுவதும் நேற்று மாலை மேகமூட்டமான வானிலையாக இருந்த நிலையில், ராஸ் அல் கைமாவில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
மேலும் NCM வெளியிட்ட வானிலை விபரங்களின் படி, நேற்று காலை, மெசாய்ரா (அல் தஃப்ரா பகுதி) இல் 10.6 °C மிகக் குறைந்த வெப்பநிலையும் , அதே நேரத்தில் கேஸ்யோராவில் (அல் அய்ன்) அதிகபட்சமாக 34.9 °C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அத்துடன் வெள்ளிக்கிழமை காலை, ஈரப்பதம் அதிகரிக்கும் என்றும் மையம் கணித்துள்ளது.
அதே போல் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் எனவும், பல்வேறு பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் காற்று வீசும், மேலும் அவை மணிக்கு 40 கிமீ வேகம் வரை அதிகரிக்கும், தூசி மற்றும் மணலை கிளப்பி, சாலைகளில் தெரிவுநிலையைக் (visibility) குறைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓட்டுநர்கள் சாலைகளில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வானிலை அறிக்கையின் படி, பிப்ரவரி 21, 2025 வெள்ளிக்கிழமையன்று, மேகமூட்டமான வானிலை இருக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வெள்ளி இரவு மற்றும் சனிக்கிழமை காலை ஈரப்பதம் அதிகமாக இருக்கும், குறிப்பாக கடற்கரை பகுதிகளில், மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாக மையம் கூறியுள்ளது.
கடலோரப்பகுதிகளைப் பொறுத்தவரை காற்று மிதமான வேகத்துடன் இருக்கும், மேலும் அரேபிய வளைகுடாவில் கடல் அமைதியாக இருக்கும், ஆனால் ஓமான் கடலில் சற்று வேகமான அலையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel