புனித ரமலான் மாதத்திற்காக துபாய் எமிரேட்டின் முக்கிய இடங்கள் விளக்குகள் மற்றும் கலைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தெருக்களும் முக்கிய அடையாளங்களும் விளக்குகள், வண்ணமயமான வடிவமைப்புகள் மற்றும் ஒளிக்காட்சிகளால் ஜொலிக்கின்றன, இது எமிரேட் முழுவதும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ரமலானை வரவேற்கும் அழகான சூழ்நிலையை உருவாக்குகிறது.
ஜுமைரா முதல் அல் கவானீஜ் வரை, இந்த அலங்காரங்கள் ரமலானின் போது ஒற்றுமை, தாராள மனப்பான்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உணர்வை பிரதிபலிக்கும் பண்டிகைச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இது துபாயின் இரண்டாவது துணை ஆட்சியாளரும் துபாய் ஊடக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் அகமது பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட #RamadanInDubai பிரச்சாரத்தின் இரண்டாவது பதிப்பின் ஒரு பகுதியாகும்.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உடன் இணைந்து, பிராண்ட் துபாய், துபாயின் தெருக்கள், அடையாளங்கள் மற்றும் மசூதிகளை ஒளிரச் செய்யும் ஒரு புதிய திட்டமான ‘அன்வார் துபாய்’ இன் ஒரு பகுதியாக இந்த பிரம்மிப்பூட்டும் அலங்காரங்களை துபாய் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் துபாய் முனிசிபாலிட்டி, வாஸ்ல் குழு, துபாய் ஹோல்டிங், துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை, எமார், மஜித் அல் ஃபுத்தைம், அல்-ஃபுத்தைம் குழு ஆகிய முக்கிய நிறுவனங்களும் இணைந்துள்ளது.
ரமலான் அலங்காரங்களுடன் சிறப்பிக்கப்பட்ட பகுதிகள்:
- ஜுமைரா தெரு, அல் கவானீஜ் தெரு, ஜாபீல் பேலஸ் தெரு (RTA ஆல் அலங்கரிக்கப்பட்டவை)
- தேராவில் உள்ள க்ளாக்டவர் ரவுண்டானா (துபாய் நகராட்சியால் அலங்கரிக்கப்பட்டது)
- வாஸ்ல் குழு சமூகங்கள் வாஸ்ல்1, வாஸ்ல் வில்லேஜ், ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட், கராமா, வாஸ்ல் 51, டார் வாஸ்ல்
- குளோபல் வில்லேஜ், அல் சீஃப், அல் கவானீஜ் வாக், DIFC, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப் போன்ற பிரபலமான இடங்களும் வசீகரிக்கும் ஒளி மற்றும் ஒலி திட்டங்களுடன் ஜொலிக்கின்றன.
இந்த அற்புதமான காட்சிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, நகரம் முழுவதும் ரமலான் பண்டிகை உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அமீரகத்தை பொருத்த வரையில் அபுதாபி எமிரேட்டானது ரமலான் மாதம் முழுவதும் நகரின் அனைத்து பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் ஒவ்வொரு ஆண்டும் ஒளிரச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel