துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையிலான வழித்தடங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலைப் பயனர்கள் பலரும் தினசரி போராடி வருகின்றனர், இதனால் குறிப்பிடத்தக்க காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போக்குவரத்தில் சிக்கி நீண்ட நேரம் செலவிடுவதைத் தவிர்க்க, சில குடியிருப்பாளர்கள் விடியற்காலையில் வீட்டை விட்டு வெளியேறுவதன் மூலமோ அல்லது போக்குவரத்து சீராகும் வரை வேலை முடிந்த பிறகு மசூதிகள், கஃபேக்கள் அல்லது ஜிம்களில் தங்குவதன் மூலமோ தங்கள் அட்டவணையை சரிசெய்வதாகக் கூறப்படுகின்றது.
சமீபத்தில், கூட்டாட்சி தேசிய கவுன்சில் (FNC) உறுப்பினர் அட்னான் அல் ஹம்மாதி இந்தப் பிரச்சினையை பற்றி கவுன்சில் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது, “இரு நகரங்களுக்கிடையில் பயணம் செய்யும் ஒரு ஊழியர் ஆண்டுதோறும் சுமார் 460 மணிநேரம் வரை சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார், இது 60 வேலை நாட்களுக்குச் சமம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய், அமைச்சகம் இந்த நிலைமையை ஆய்வு செய்து துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்களின் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஒரு தீர்வைக் காண முயன்று வருவதாக கூறியுள்ளார்.
நெரிசலை சமாளிக்கும் வாகன ஓட்டிகள்
இந்நிலையில் செய்தி ஊடகம் ஒன்று, ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் இடையில் தினமும் பயணிக்கும் பல குடியிருப்பாளர்களை தொடர்பு கொண்டு போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து நிலைமை அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்துள்ளது.
அதில் ஒரு குடியிருப்பாளர், ஷார்ஜாவிலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்குள் வேலைக்குச் செல்வார் என்றும், திரும்பும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாலும் மசூதியில் பிரார்த்தனை முடித்து, போக்குவரத்து சீராகும் வரை அங்கேயே காத்திருந்து பின்னர் ஷார்ஜா வந்தடைவதாகவும் கூறியுள்ளார்.
ஜஹீர் உசேன் என்ற மற்றொரு சாலைப் பயனர், சாலைகள் வாகனங்களால் நிரம்பியிருந்தால் மசூதிக்குச் சென்று தொழுகையை முடித்து, பின்னர் அதிக போக்குவரத்தைத் தவிர்க்க ஜிம்மிற்குச் செல்வதாகவும், பின்னர் இரவு 9 மணிக்கு ஷார்ஜா வந்தடைவதாகவும் தெரிவித்துள்ளார். இது வெறுப்பூட்டும், ஆனால் மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கியிருப்பதை தவிர்ப்பதற்கான ஒரே வழி இதுதான் என்றும் அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
துபாயில் பணிபுரிந்தாலும், அடிக்கடி நெரிசலில் சிக்கிக் கொள்வதால், நோன்பை முடிக்கும் நேரத்தில், வேறு எதையும் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாக இருப்பதாக பல குடியிருப்பாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் தங்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகவும், இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் போவதாகவும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்வு என்ன?
தற்போது நிலவும் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குமாறு அட்னான் அல் ஹம்மாதி வலியுறுத்தியுள்ளார். துபாய்க்குள் தினமும் நுழையும் கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 850,000 ஆக இருந்த கார்கள் தற்போது 1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதலாக, துபாயில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எனவே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சமாளிக்க அவசர நடவடிக்கை தேவை என்பதை FNC உறுப்பினர் தேசிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel