துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்கிழமை ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் செல்லவிருப்பதாக துபாய் ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. இது துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ பயணமாகும்.
இந்த பயணத்தின் போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் வழிகளை ஆராய்வதற்காக ஷேக் ஹம்தான் மூத்த இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
பயணத்தின் முதல் நாளான ஏப்ரல் 8 ஆம் தேதியன்று, இந்தியப் பிரதமர் மோடி அவருக்கு மதிய உணவை விருந்தளிப்பார் என்றும், கூடுதலாக ஷேக் ஹம்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் இரண்டாவது நாளில், ஷேக் ஹம்தான் மும்பைக்குச் செல்வார் என்றும், அங்கு அவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய வணிகத் தலைவர்களுடன் ஒரு வணிக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகின்றது.
துபாய் இளவரசரின் இந்தியா பயணம், இரு நாடுகளுக்கு இடையே வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சர்வதேச கூட்டாளர்களுடன் வலுவான கூட்டணிகளை உருவாக்குவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலோபாய கவனத்தை எடுத்துக்காட்டுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக ஷேக் முகமது பின் சையத் மற்றும் பிரதமர் மோடியின் தலைமையில் வலுவடைந்து வருகின்றன. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத், வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டிற்காக (Vibrant Gujarat Global Summit) இந்தியாவிற்கு பயணம் செய்தபோது அன்பான வரவேற்பைப் பெற்றார்.
அடுத்ததாக கடந்த செப்டம்பர் 2023 இல், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் விவாதித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக, கலாச்சார மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் துபாய் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிட்டத்தட்ட 4 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது. இது அமீரகத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel