1974ஆம் ஆண்டு முதல், துபாயை ஆளும் மக்தூம் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் தொடர்ச்சியான வருகைகள் மூலம் இந்தியாவுடன் வலுவான தொடர்புகளை வளர்த்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்தியுள்ளன. மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் முதல் தற்போதைய துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் வரை, துபாயின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி இரு நாடுகளின் ஒத்துழைப்பிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். மூன்று தலைமுறையாக இந்தியாவிற்கு வருகை தரும் துபாய் அரச குடும்பத்தினர் பற்றியும், அவர்களின் வருகை பற்றியும் சிறிய கண்ணோட்டத்தை இங்கே பார்க்கலாம்:
முக்கிய அரச வருகைகள்:
1974: அப்போதைய துபாய் ஆட்சியாளரான ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள், இந்தியாவிற்கு முதல் அரச வருகையை மேற்கொண்டு இந்திய ஜனாதிபதி டாக்டர் ஃபக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். இந்த பயணத்தின் போது, ஷேக் ரஷீத்தின் தூதுக்குழு ஆக்ராவிற்கும் விஜயம் செய்தது, அங்கு அவர்கள் தாஜ்மஹாலைப் பார்த்த நிகழ்வு உண்டு.
2007: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இந்தியாவிற்கு வருகை தந்து, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது,டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டங்களைப் பாராட்டியதுடன், அமீரகம் இந்திய தொழிலாளர்களுக்கும், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார். இந்த சந்திப்பில் பல முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
2010: ஷேக் முகமது ஒரு சிறிய பயணமாக இந்தியா சென்றார். அப்போது அவர் மீண்டும் டாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, நிதி மற்றும் வங்கித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உட்பட இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
2014: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் அவர்கள், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டார், உலகின் ஒரே நீச்சல் யானையான ராஜனுடன் நீருக்கடியில் ஸ்நோர்கெலிங் (snorkelling) செய்வது பிரபலமானது. இதனை அவர் மேற்கொண்டு தனது அனுபவத்தை ஷேக் ஹம்தான் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
2025: தற்போது, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஷேக் ஹம்தான் தனது இந்திய அதிகாரப்பூர்வ வருகையுடன் இந்த பாரம்பரியத்தைத் தொடர்கிறார். மோடியுடனான சந்திப்புக்கு பிறகு, ஷேக் ஹம்தான், “இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, வரலாற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் புதுமை மற்றும் நிலையான செழிப்புக்கான பகிரப்பட்ட பார்வையை மையமாகக் கொண்டுள்ளது” என்று X தளத்தில் தெரிவித்துள்ளார்.
துபாயின் ஆளும் தலைவர்களின் இந்த வருகைகள் பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், எதிர்கால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளன. ஷேக் ஹம்தானின் இரண்டு நாள் பயணம் ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) முடிவடையும். இந்த அதிகாரப்பூர்வ பயணம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட கூட்டாண்மைக்கான தற்போதைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel