ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி தலைநகராக விளங்கும் துபாய், இந்தியாவை சேர்ந்த முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இங்கே வசிக்கும் இந்தியர்களில் புதிதாக தொழில் தொடங்க முன்னெடுப்பவர்களுக்கும் தங்கள் தொழில்களை அமைக்க பிரபலமான இடமாக இருந்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் 73,000 க்கும் மேற்பட்ட இந்திய வணிகங்கள் துபாய் வர்த்தக சபையில் (Dubai Chamber of Commerce) பதிவு செய்து இங்கே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
அண்மையில், மும்பையில் நடைபெற்ற துபாய்-இந்தியா வணிக மன்றத்தில் (Dubai-India Business Forum) இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக மற்றும் வணிக உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முக்கிய நிகழ்வில் துபாய் மற்றும் இந்தியாவிலிருந்து செல்வாக்கு மிக்க தலைவர்கள், வணிக வல்லுநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் புதுமைக்கான புதிய வழிகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகின்றது.
வர்த்தகம், தொழில்நுட்பம், நிதி மற்றும் புதுமை போன்ற துறைகளில் பரஸ்பர வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளைப் பற்றி விவாதிக்க ஒரு தளமாக செயல்பட்ட இந்த நிகழ்வில், இரு நாடுகளிலிருந்தும் சிறந்த தொழில் நிறுவனத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய துபாய் சேம்பர்ஸின் துணைத் தலைவர் அஹ்மத் பின் பியாட் (Ahmad Bin Byat), இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் விரிவடையும் வர்த்தக உறவை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இந்தியாவிற்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்ற போது இந்த வணிக மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள்:
இந்தியா தொடர்ந்து துபாயின் சிறந்த வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2019 மற்றும் 2023க்கு இடையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான எண்ணெய் அல்லாத வர்த்தகத்தின் மதிப்பு 190 பில்லியன் டாலராக இருந்தது, இது இந்த காலகட்டத்தில் 23.7 சதவீத வளர்ச்சியுடன் எங்கள் வலுவான மற்றும் விரிவடையும் வர்த்தக தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்தியா 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகள் மற்றும் 19 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் துபாயின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வர்த்தக புள்ளிவிவரங்களில் 46 பில்லியன் டாலராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் வெற்றியில் இந்திய வணிகங்களின் பங்கு:
தொடர்ந்து உரையாற்றிய பியாட், துபாயின் பொருளாதார வெற்றியில் இந்திய வணிகங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். இது பற்றி அவர் கூறுகையில், 2024 நிலவரப்படி 70,600 இந்திய நிறுவனங்கள் துபாய் வர்த்தக சபையில் செயலில் உள்ள உறுப்பினர்களாக உள்ளதாகவும், 2023 இல் மட்டும் 16,623 புதிய இந்திய நிறுவனங்கள் சேம்பரில் இணைந்ததாகவும் தெரிவித்தார். இது துபாயில் வணிகம் செய்வதில் இந்திய தொழில்முனைவோர் மத்தியில் தொடர்ந்து வலுவான ஆர்வத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு அமர்வின் போது ஒரு விளக்கக்காட்சியில், 2015 முதல் சபையில் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையில் 173.7% அதிகரிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 73,114 இந்திய நிறுவனங்களில், 36,500 க்கும் மேற்பட்டவை வர்த்தகம் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் வணிக சேவைகளில் 17,600 நிறுவனங்களும் மற்றும் கட்டுமானத்தில் 12,300 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்திய வணிகங்களுக்கான ஆதரவு:
துபாய் சேம்பர்ஸ் இந்திய வணிகங்களை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பியாட் எடுத்துரைத்தார். 2018 இல் நிறுவப்பட்ட சேம்பர்ஸின் மும்பை அலுவலகம், இந்தியாவிலிருந்து வரும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் துபாயின் விதிமுறைகளை வழிநடத்தவும், சந்தையில் நுழையவும், மூலோபாய இணைப்புகளை உருவாக்கவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துபாயில் வணிகம் செய்வது எமிரேட்டுக்கு மட்டுமல்லாமல், பரந்த உலகளாவிய சந்தைக்கும் கதவுகளைத் திறந்து, துபாயில் இயங்கக்கூடிய வணிகங்களுக்கு உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கான இணையற்ற அணுகலையும் வழங்குகிறது என்றும் பியாட் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel