ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவம் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு கல்வியாண்டின் (2024–2025) மூன்றாம் பருவமானது, திட்டமிடப்பட்டபடி ஏப்ரல் 14ம் தேதி திங்கள்கிழமை தொடங்கும் என்று அமீரகத்தின் கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமீரகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டும், தங்களின் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வரவேற்கத் தயாராக உள்ளன. இதனால் அவர்கள் சீராகவும் பாதுகாப்பாகவும் பள்ளிக்கு திரும்புவதை உறுதிசெய்ய தெளிவான விதிகளையும் அமீரக கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3 ஆம் பருவத்திற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்
1. நேரில் வருகை கட்டாயம்:
அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு நேரில் வருகை தர வேண்டும். ஒவ்வொரு பாடத்தின் போதும் நியாயமற்ற காரணங்களுக்காக பள்ளிக்கு வராமல் இருப்பது பதிவு செய்யப்படும். அடிக்கடி இவ்வாறு வராதது மாணவரின் நடத்தை பதிவை பாதிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. எலெக்ட்ரானிக் சாதனங்கள்:
பள்ளி வளாகத்திற்குள் மொபைல் போன்கள், ஐபேட்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்னணு சாதனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே, மாணவர் நடத்தைக் கொள்கையின் படி இதுபோன்ற எந்த சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும். தேவையான அனைத்து பள்ளிப் பொருட்களும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
3. சீருடை விதிகள்:
பள்ளி சீருடை அணிந்து வருவது அனைவருக்கும் கட்டாயமாகும். விளையாட்டு சீருடை PE வகுப்புகளின் போது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஹூடிகள் அல்லது வேறு எந்த அங்கீகரிக்கப்படாத உடையையும் அணிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான சுகாதாரம் மற்றும் சீர்ப்படுத்தலை பராமரிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறான சிகை அலங்காரங்கள் அனுமதிக்கப்படாது.
4. போக்குவரத்து & பள்ளி அணுகல்
பெற்றோர்கள் ஏதேனும் ஒரு போக்குவரத்து முறையை (பள்ளி பேருந்து அல்லது தனியார் கார்) தேர்வு செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட இறக்கிவிடுதல்/ஏறும் நேரங்கள் மற்றும் வாயில்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக முறையான உடையை அணிய வேண்டும்.
5. பள்ளி நேரங்கள்
- திங்கள் முதல் வியாழன்: காலை 7:00 மணி – பிற்பகல் 2:10 மணி
- வெள்ளி: காலை 10:30 மணிக்கு (4வது பாடத்திற்குப் பிறகு) முடிவடைகிறது
- இரண்டாவது இடைவேளையின் போது நியமிக்கப்பட்ட பிரார்த்தனைப் பகுதிகளில் லுஹர் தொழுகை கடைபிடிக்கப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel