ADVERTISEMENT

இனி எமிரேட்ஸ் ஐடி கார்டும் தேவை இல்லை..!! புதிய டிஜிட்டல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமீரக அரசு திட்டம்…

Published: 17 Apr 2025, 10:02 AM |
Updated: 17 Apr 2025, 7:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல அத்தியாவசிய சேவைகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் எமிரேட்ஸ் ஐடி கார்டுகளை கையில் எடுத்துச் செல்லவோ அல்லது நேரில் காட்டவோ வேண்டிய தேவையை நீக்கும் புதிய டிஜிட்டல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமீரக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஒரு நபரின் அடையாளத்தை சரிபார்க்க முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்தும் இந்த புதிய அமைப்பு, ICP ஸ்மார்ட் செயலி மூலம் கிடைக்கும். இந்த அமைப்பு ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

வங்கி, சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற முக்கிய துறைகளில் இ-எமிரேட்ஸ் ஐடிகளின் பயன்பாட்டை விரிவுபடுத்த அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) செயல்பட்டு வரும் வேளையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரசபையின் கூற்றுப்படி, டிஜிட்டல் அடையாள தீர்வுகளின் பயன்பாடு கவனமாக திட்டமிடப்பட்ட கட்டங்களில் இது செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு உடனடி நன்மைகளை வழங்க எளிய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இந்த மாற்றம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முதலில் பின்வரும் முக்கியமான துறைகளில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவை:

ADVERTISEMENT
  • அரசு சேவைகள்
  • வங்கிகள்
  • சுகாதாரம்
  • ஹோட்டல்கள்
  • தொலைத்தொடர்பு
  • காப்பீடு

இந்த தகவலானது ஒரு கூட்டாட்சி தேசிய கவுன்சில் (Federal National Council-FNC) அமர்வின் போது பகிரப்பட்டது. அங்கு கவுன்சிலின் உறுப்பினரான அட்னான் அல் ஹம்மாதி, டிஜிட்டல் மாற்றத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல சேவைகளில் இன்னும் அசல் எமிரேட்ஸ் ஐடி தேவை இருக்கின்றது என்பதை எடுத்துரைத்துள்ளார்.

எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது, ​​வங்கி பரிவர்த்தனைகளை முடிக்கும்போது அல்லது ஹோட்டல்களுக்குச் செல்லும்போது மக்கள் அசல் எமிரேட்ஸ் ஐடியைக் காட்ட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த அத்தியாவசியத் துறைகளில் அடையாள சரிபார்ப்பை ஒழுங்குபடுத்த விரைவான, பயனுள்ள தீர்வுகளுக்கான அவசரத் தேவை உள்ளது” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு ICP சார்பாகப் பேசிய அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஓவைஸ், டிஜிட்டல் ஐடி ஏற்கனவே பல சேவைகளுக்குப் பயன்பாட்டில் உள்ளது என்றும், விரைவில் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், FNC உறுப்பினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட துறைகளில் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு அதிகாரசபை முன்னுரிமை அளிக்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். FNC-யில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளில் ஆரம்ப கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் இந்த அமைப்புகளின் முழு அளவிலான வெளியீடு அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel