ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட, எமிராட்டி ஹோட்டல் குழுவான ரொடானா (Rotana), ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் 20க்கும் மேற்பட்ட புதிய ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதால், 1,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை வரும் நாட்களில் பணியமர்த்த உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.
அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட Rotana குழுமம், தற்போது சுமார் 80 ஹோட்டல்களை இயக்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை அமீரகத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் துருக்கி, ஜோர்டான், ஓமன், எகிப்து, காங்கோ மற்றும் தான்சானியா போன்ற நாடுகளில் அதிக ஹோட்டல்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சுமார் 120 ஹோட்டல்களை அடைய இலக்கு வைத்துள்ளதாக, துபாயில் நடைபெற்று வரும் அரேபியன் ட்ராவல் மார்க்கெட் 2025ல், Rotana நிறுவனத்தின் CEO பிலிப் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே, புதிய ஹோட்டல்கள் செயல்பாட்டுக்கு வரும்போது அதன் தொழிலாளர்களின் எண்ணிக்கை 11,000 க்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான கேவன்டிஷ் மேக்ஸ்வெல் (Cavendish Maxwell) படி, 2027 ஆம் ஆண்டுக்குள் துபாய் முழுவதும் 11,300 க்கும் மேற்பட்ட புதிய ஹோட்டல் அறைகள் திறக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதில் இந்த ஆண்டு மட்டும் 4,620 ஹோட்டல் அறைகள் திறக்கப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், துபாயின் மொத்த ஹோட்டல் துறையானது 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 769 ஹோட்டல்களில் 162,600 அறைகளை தாண்டி, உலகளவில் சுற்றுலாவிற்கான முக்கிய பிராந்திய மையமாக துபாய் அதன் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் ஆட்சியாளர்களின் புதிய சுற்றுலா கொள்கைகள், விசா சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்க முயற்சிகளால், விருந்தோம்பல் துறைகளின் வளர்ச்சியானது துபாய் மட்டுமல்லாது அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து எமிரேட்களிலும் தொடர்ந்து பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel