துபாய் சமீப காலமாக மேற்கொண்டு வந்த அல் ஷிண்டகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தில் தற்பொழுது ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஞாயிற்றுக்கிழமை பர் துபாய் பக்கத்தில் உள்ள மேம்பாட்டுத் திட்டத்தின் ஐந்து கட்டங்களும் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளது. RTAவின் படி, இந்த குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்படுத்தல், அந்த வழித்தடத்தில் பயண நேரத்தை 80 நிமிடங்களிலிருந்து வெறும் 12 நிமிடங்களாக வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஷேக் ரஷீத் சாலை மற்றும் அல் மினா ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷன் மேம்பாட்டின் கீழ் ஐந்தாவது மற்றும் இறுதி பாலத்தின் திறப்பு விழாவுடன் இந்த அறிவிப்பு வெளியிடடப்பட்டது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இப்போது அல் கர்ஹுத் பிரிட்ஜில் இருந்து இன்ஃபினிட்டி பிரிட்ஜ் வழியாக போர்ட் ரஷீத் வரையிலும், மேலும் வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட்டிற்கும் தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
RTA-வின் படி, ஜுமேரா ஸ்ட்ரீட்டிலிருந்து இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு பயணம் செய்வது இப்போது ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதேபோல், இன்ஃபினிட்டி பிரிட்ஜிலிருந்து அல் மினா ஸ்ட்ரீட்டுக்குச் சென்று 2nd டிசம்பர் ஸ்ட்ரீட் இன்டர்செக்ஷனில் அல் வாஸ்ல் சாலைக்குச் செல்ல ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
RTA இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டார் அல் தயர், நகரம் முழுவதும் உள்ள முக்கிய வளர்ச்சிகள் மற்றும் சமூகங்களை இணைப்பதில் இந்த வழித்தடம் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பெசோகையில், “இந்த வழித்தடம் தேரா மற்றும் பர் துபாய்க்கு சேவை செய்கிறது, அத்துடன் துபாய் ஐலேண்ட்ஸ், துபாய் வாட்டர்ஃபிரண்ட், துபாய் மரிடைம் சிட்டி மற்றும் போர்ட் ரஷீத் உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் சேவை செய்கிறது. இந்த திட்டத்தால் சேவை செய்யப்படும் மொத்த மக்கள் தொகை ஒரு மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேராவில் உள்ள இன்ஃபினிட்டி பிரிட்ஜ் முடிவில் இருந்து அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் கெய்ரோ ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷன் வரை நீட்டிக்கப்படும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை திட்டத்தில் நடந்து வரும் முன்னேற்றத்தையும் RTA உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அல் ஷிண்டாகா காரிடார் மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக RTA ஏராளமான இன்டர்செக்ஷன் மேம்பாடுகளை செயல்படுத்தியுள்ளது. இந்த மேம்பாடுகள் நெரிசலைக் குறைத்தல், பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் துபாயின் நீண்டகால நகர்ப்புற மேம்பாட்டு உத்தியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel