ஷார்ஜாவின் தொழில்துறை பகுதி 17 இல் அமைந்துள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை (மே 21) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக ஷார்ஜா சிவில் பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தெரிவிக்கையில் புதன்கிழமை இரவு 10:15 மணிக்கு தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு குழுக்கள் விரைவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
கிடங்கில் காலணிகள், பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கவும், அருகிலுள்ள இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் திறமையாக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்களின் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, அடுத்தநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் அந்தப் பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel