ADVERTISEMENT

காலாவதியான விசாவுடன் தங்கியிருந்தவருக்கு விதிக்கப்பட்ட 60,000 திர்ஹம்ஸ் அபராதம்.. தள்ளுபடி செய்த நீதிபதி.. அமீரக அதிபர் பாராட்டு..!! நடந்தது என்ன?

Published: 13 Jun 2025, 8:21 PM |
Updated: 13 Jun 2025, 8:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை நீதிபதி ஒருவர் தள்ளுபடி செய்த நிலையில், சமீபத்திய கௌரவிப்பு விழாவில் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களிடம் அந்த நீதிபதி பாராட்டு பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உம் அல் குவைன் ஃபெடரல் கோர்ட் ஆஃப் ஃபர்ஸ்ட் இன்ஸ்டன்ஸ் (Umm Al Quwain Federal Court of First Instance) நீதிபதி ஹமீத் அல் அலி அவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கும், தனது மனைவிக்கும், நான்கு குழந்தைகளுக்கும் ரெசிடென்சி விசாக்களை புதுப்பிக்காத ஒரு பாகிஸ்தானிய நபருக்கு விதிக்கப்பட்ட 60,000 திர்ஹம்ஸ் அபராதத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து வெளியான அறிக்கைகளின் படி, இந்த வழக்கில், புற்றுநோயுடன் போராடி வந்த தனது எமிரேட் ஸ்பான்சரை கவனித்துக்கொண்டிருந்தபோது,  காலாவதியான விசாவுடன் தங்கி வந்ததை அறியவில்லை என்று அந்த நபர் நீதிமன்றத்தில் விளக்கியுள்ளார். இந்த சூழலுக்கு மத்தியில், இந்த வழக்கு சையத் மனிதாபிமான பணி தினத்தன்று (Zayed Humanitarian Work Day) விசாரிக்கப்பட்டதால், வழக்கில் குறிப்பிடத்தக்க திருப்பத்திற்கு வழிவகுத்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபக தந்தையின் மதிப்புகளை தொண்டு செயல்கள் மூலம் கொண்டாடும் வருடாந்திர நிகழ்வாகும்.

விசாரணையின் போது, ​​நீதிபதி அல் அலி, அந்த நபரின் இளம் மகன் பாரம்பரிய எமிரேட் உடை அணிந்திருப்பதைக் கவனித்து, அவரது பெயரைக் கேட்டதாகவும், அதற்கு சிறுவன், “சையத்” என்று மெதுவாக பதிலளித்ததாகவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

சிறுவனின் பதில் மற்றும் அன்றைய சிறப்பு தினத்தினாலும் நெகிழ்ச்சியடைந்த நீதிபதி, தனது தோள்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகக் கொடியை அகற்றி, அதை குழந்தையின் மீது அணிவித்து, “சையத்துக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. சையத் கௌரவிக்கப்படுகிறார்” என்று அறிவித்தார். பின்னர் அவர் முறையாக தண்டனைகளை ரத்து செய்துள்ளார்.

நீதிபதியின் இரக்கமுள்ள இந்த செயல் நாடு முழுவதும் பரவியதுடன், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது மற்றும் நீதி மற்றும் மனிதநேயத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை நினைவூட்டுவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel