துபாயில் 2025 ஜனவரி முதல் மே வரை நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் விதிகளை மீறி சாலைகளைக் கடப்பது மற்றும் இ- ஸ்கூட்டர்களை தவறாகப் பயன்படுத்தியது போன்றவற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக துபாய் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இ-ஸ்கூட்டர் மற்றும் மிதிவண்டிகள் சம்பந்தப்பட்ட 254 விபத்துக்கள் எமிரேட்டில் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 259 பேர் காயமடைந்தனர், அவற்றில் 17 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், துபாய் காவல்துறை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தவறான இடங்களில் சாலையைக் கடந்ததற்காக 28,027 அபராதங்களை விதித்தது மற்றும் 15,029 ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், பாதுகாப்பற்ற பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களின் நடத்தைகளை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அதிகாரம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், உரிமம் பெறாத இளைஞர்கள் மேற்பார்வை இல்லாமல் இ-ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளை இயக்குவது குறித்து குடியிருப்பாளர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்குள் இரண்டு இ-ஸ்கூட்டர் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்தன, இதில் 15 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக துபாய் காவல்துறை பகிர்ந்துள்ள வீடியோக்களில், குறிப்பிடப்படாத பகுதிகளில் மக்கள் ஆபத்தான முறையில் சாலைகளைக் கடப்பதையும், ஹெல்மெட் அல்லது சரியான சாலை விழிப்புணர்வு இல்லாமல் பரபரப்பான தெருக்களில் வாகனம் ஓட்டுபவர்களை ஓட்டுவதையும் காட்டுகிறது.
விதிமீறல்களுக்கு கடுமையான தண்டனைகள்
குறிப்பிடப்படாத பகுதிகளில் இருந்து சாலைகளை கடப்பது இப்போது கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கின்றது. அவை
- ஆபத்தான முறையில் சாலையைக் கடப்பவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
- போக்குவரத்து விபத்து ஏற்பட்டால், குற்றவாளிகள் சிறைவாசம் மற்றும் 5,000 திர்ஹம் முதல் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- 80 கிமீ/மணி அல்லது அதற்கு மேற்பட்ட வேக வரம்புகள் உள்ள பகுதிகளில், கடக்கும் எந்தவொரு நபருக்கும் குறைந்தது மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம்க்கு குறையாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான அழைப்பு
துபாய் காவல்துறையின் செயல்பாடுகளுக்கான துணைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பரபரப்பான பகுதிகளில் வசிப்பவர்களிடையே, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் (RTA) கூட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
பாதசாரி பாலங்கள் மற்றும் கிராசிங் இடங்களைப் பயன்படுத்தவும், இ-ஸ்கூட்டர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், துபாய் காவல்துறை செயலி மூலமாகவோ அல்லது 901 ஐ அழைப்பதன் மூலமாகவோ பொறுப்பற்ற நடத்தையைப் புகாரளிக்கவும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel