ADVERTISEMENT

சட்டவிரோத பார்ட்டிஷன் ரூம்கள் மீதான துபாயின் நடவடிக்கை: மலிவான வாடகையைத் தேடி பிற எமிரேட்களுக்கு செல்லும் குடியிருப்பாளர்கள்!!

Published: 30 Jun 2025, 6:18 PM |
Updated: 30 Jun 2025, 6:18 PM |
Posted By: Menaka

துபாய் முழுவதும் சட்டவிரோதமாக பிரிக்கப்பட்ட வீடு அல்லது அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் மீதான சமீபத்திய நடவடிக்கை, பல குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களை அருகிலுள்ள எமிரேட்களில் மாற்று வீடுகளைத் தேடத் தூண்டியுள்ளது. அமீரகத்தை பொறுத்தவரை வீடு அல்லது அபார்ட்மெண்ட் ரூமில் வசிக்கும் நபர்கள் தங்களது அறைகளை மற்ற நபர்களுடன் பகிர்ந்து பலர் ஒரே அறையில் தங்கக்கூடிய ஒரு பொதுவான பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. வருமானம் குறைவு அல்லது அதிகபட்ச வாடகை இதற்கு காரணமாகும்.

ADVERTISEMENT

இந்நிலையில் துபாய் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கட்டிட விதிமுறைகளை மீறுவதை காரணம் காட்டி, இவ்வாறு பிரிக்கப்பட்ட அறைகளைப் (partitioned room) பயன்படுத்துவதற்கு எதிராக கள ஆய்வுகள் உள்ளிட்ட  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், குடியிருப்பாளர்கள் மைய இடங்களிலிருந்து வெளியேறி, மலிவான வாடகையைத் தேடி அருகிலுள்ள பிற எமிரேட்களுக்கு இடம்பெயர வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பலருக்கு, பார்ட்டிஷன் ரூம்கள் சிறந்தவை அல்ல என்றாலும், பணியிடங்களுக்கு அருகில் கிடைப்பதாலும், மலிவு விலை, பொது போக்குவரத்து மற்றும் சமூக உணர்வை வழங்குவதாலும் இதனை தேர்வு செய்கின்றனர். இப்போது, ​​இந்த மாற்றம் உணவகத் தொழிலாளர்கள் முதல் விற்பனை ஊழியர்கள் மற்றும் டெலிவரி ரைடர்கள் வரை பல்வேறு துறைகளில் இருப்பவர்களை பாதித்துள்ளது. இப்போது நீண்ட பயணங்கள், பகிரப்பட்ட பாத்ரூம்கள் மற்றும் அதிகரித்த செலவு என கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

மிகவும் சோர்வாக இருக்கிறேன்

துபாயில் வசித்து வந்த ஒருவர் கூறுகையில், அல் ரிகாவில் உள்ள பார்ட்டிஷன் ரூமுக்கு 1,400 திர்ஹம் வாடகை செலுத்தி வந்த நிலையில், இப்போது ஷார்ஜாவின் அபு ஷகாராவில் 700 திர்ஹம்ஸ் வாடகையில் பகிரப்பட்ட இடத்திற்கு மாறியுள்ளார். இதன் மூலம், வாடகைப் பணத்தை மிச்சப்படுத்தினாலும், அவரது தினசரி பயணம் இப்போது 90 நிமிடங்களை தாண்டுவதால் சோர்வாக உணர்வாதாகத் தெரிவித்துள்ளார். “துபாயில் எல்லாம் வசதியாக இருந்தது. மளிகைக் கடை, மருந்தகம் மற்றும் மெட்ரோ ஆகியவை கீழே இருந்தன. இப்போது நான் பேருந்து, மெட்ரோ மற்றும் சில நேரங்களில் டாக்ஸியில் செல்கிறேன்” என்று போக்குவரத்து சிரமம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.

ரூம்மேட்களை பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை

தேராவில் பணிபுரிந்து வந்த ஒரு நபர் தெரிவிக்கையில், 2 படுக்கையறைகள் கொண்ட ஒரு பிளாட்டில் 13 பேருடன் வசித்து வந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய கள ஆய்வுகளுக்குப் பிறகு, அல் நஹ்தாவுக்கு இடம் பெயர்ந்துள்ளார், இப்போது மூன்று பேருடன் பகிரப்பட்ட அறையில் 1,000 திர்ஹம் செலுத்துகிறார். “இந்த இடத்தில் அறையில் குறைவான மக்கள் தங்கினாலும் வாடகையும், பயண நேரமும் அதிகரித்துள்ளது” என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மலிவான வாடகையில் தங்குமிடத்தைப் பிடிக்க போராட்டம்

முன்னர் தனது பணியிடத்திற்கு அருகில் பகிரப்பட்ட இடத்திற்கு 600 திர்ஹம் செலுத்திய தொழிலாளி, இப்போது ஷார்ஜாவில் 850 திர்ஹம்ஸ்க்கு இடத்தைப் பெற விரும்புகிறார். மலிவு விலையில் வசிக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க போராடி வரும் அவர், “துபாயில் சலூன் எனது தங்குமிடத்திலிருந்து ஒரு நிமிட நடைப்பயணத்தில் இருந்தது, ஆனால் இப்போது எனது பயண நேரம் நிச்சயமாக அதிகரிக்கும். அது மிகவும் சிரமமாக இருந்தால், வேறொரு பணியிடத்தைக் கண்டுபிடிப்பதை நான் பரிசீலிக்க வேண்டியிருக்கும்” என்று சிரமம் தெரிவித்துள்ளார்.

பள்ளி இப்போது வெகு தொலைவில் உள்ளது

தேராவில் உள்ள தனது முந்தைய பிளாட்டை காலி செய்யச் சொன்ன பிறகு, தனது மகளுடன் ஷார்ஜாவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார். இப்போது அவர் குறைந்த வாடகை செலுத்தினாலும் அவரது மகளின் பள்ளி வெகு தொலைவில் உள்ளது. “இப்போது விடுமுறைகள் தொடங்கியுள்ளன, ஆனால் பள்ளி தொடங்கியதும், நான் மாற்று வழி ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் “அதிக கட்டணத்தில் வாடகை செலுத்துவது சாத்தியமற்றது. எங்களுக்கு மலிவு விலையில், சட்டப்பூர்வமான வீடுகள் தேவை” என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகளின் தற்போதைய நடவடிக்கையால் துபாயில் வசித்து வரும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel