ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், ஜூலை 12, சனிக்கிழமையன்று நாட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் வெப்பமான வானிலைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆம் நாளை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 47°C வரை உயரும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
அதில் அபுதாபியில், காஸ்யோரா மற்றும் அல் குவா போன்ற பகுதிகளில் நாளை பகல் நேரங்களில் வெப்பநிலை 47°C ஐ எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மெசைராவில் அதிகபட்சமாக 46°C ஐ எட்டக்கூடும் என்றும் NCM அறிவித்துள்ளது. துபாயைப் பொறுத்தவரை, வெப்பநிலை அதிகபட்சமாக 43°C ஐ எட்டும் என்றும், அபுதாபி சிட்டியில் சுமார் 41ºC வரை வெப்பநிலை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், நாளை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை, குறிப்பாக கடற்கரையில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் எனவும், இதனால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. NCM வெளியிட்ட அறிக்கையின் படி, நாளைய தினம் வானிலை பெரும்பாலும் வெயிலிலிருந்து ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், கிழக்குப் பகுதிகளில் சில மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, காற்று லேசானது முதல் மிதமானது வரை, தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி மணிக்கு 10 முதல் 20 கிமீ வேகத்தில் வீசும், சில சமயங்களில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் கடலில் சீற்றம் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel