ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெப்பநிலையானது மிகவும் தீவிரமடைந்து அரைசதம் அடித்துள்ளது. அமீரகத்தை பொருத்தவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பநிலை நிலவிய நிலையில், ஷார்ஜாவில் 50°C க்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேசமயம் குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சில பகுதிகளில் மழையும் பெய்துள்ளது.
நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, ஷார்ஜாவில் உள்ள அல் தைத் பகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு 50.2°C என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதாக தெரியவந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, அல் அய்னின் தம்தா பகுதியில் அதிகாலை 5 மணிக்கு 27.1°C என குறைந்த வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் இருந்தபோதிலும், ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் கோர் ஃபக்கான் உட்பட நாட்டின் சில கிழக்குப் பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் நிகழ்வு வெள்ளிக்கிழமை, ஜூலை 18 வரை தொடரும் என்று அமீரக தேசிய வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல பகுதிகளில் வானிலை நிலைமைகள் வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ வரை இருக்கும் என்றும், இதனால் சாலைகளில் தெரிவுநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் தற்போது கோடைகால உச்சநிலையை அனுபவித்து வருவதால், குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடிய உச்ச நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்கவும், வானிலை அறிவிப்புகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel