ADVERTISEMENT

அமீரகத்தில் கொடூரமாகத் தாக்கும் கோடை வெயில்.. 51.8°C பதிவானதாக NCM அறிக்கை!!

Published: 1 Aug 2025, 8:55 PM |
Updated: 1 Aug 2025, 9:07 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அதில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான வெப்ப அலை வீசியது. ஏனெனில், அல் அய்னின் ஸ்வைஹான் பகுதியில் அதிகபட்சமாக வெப்பநிலை 51.8°C வரை அதிகரித்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதாகக் கூறப்படுகிறது. இதே போல் நேற்றைய தினம், (வியாழன், ஜூலை 31) அல் தஃப்ரா பிராந்தியத்தின் மெசைராவில் 50.7°C வரை வெப்பநிலை பதிவானதாக NCM குறிப்பிட்டது. அதற்கு முன் தினம் (புதன், ஜூலை 30) பிற்பகலில் அதிகபட்சமாக 49.9°C வரை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த காலகட்டத்தில் இதுபோன்ற தீவிர வெப்பநிலையில் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெயிலின் உச்ச நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், கோடை காலத்தில் அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றவும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் துபாயின் கொளுத்தும் கோடைக்கு எதிர்பாராத திருப்பமாக, நகரின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் புத்துணர்ச்சியூட்டும் மழை பெய்ததாகக் கூறப்படுகின்றது, இந்த தூறல் மழை இடைவிடாத வெப்பம் மற்றும் தூசியிலிருந்து குடியிருப்பாளர்களுக்கு ஒரு சிறிய இடைவேளையை அளித்தது என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் NCM கூற்றுப்படி, அல் அய்னில் உள்ள ஷ்வைப் மற்றும் அல் ஹைர் நோக்கிச் செல்லும் துபாய்-அல் அய்ன் சாலை வழியாக லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில், storm_ae உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள், குறிப்பாக அல் ஹேர் சாலையைச் சுற்றியுள்ள மழையால் நனைந்த தெருக்களின் வீடியோ கிளிப்களை பகிர்ந்துள்ளன.


இது போன்ற சமயங்களில், அபுதாபி காவல்துறை ஈரமான சாலைகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தும் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. எலெக்ட்ரானிக் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும், மாறிவரும் சாலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப தங்கள் வாகனம் ஓட்டும் நடத்தையை சரிசெய்யவும் வாகன ஓட்டிகள் நினைவூட்டப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இனி வரும் நாட்களை எதிர்நோக்குகையில், குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்புகளுடன் ஓரளவு மேகமூட்டமான வானம் இருக்கும் என்று NCM கணித்துள்ளது. மேற்கு கடற்கரை மற்றும் உட்புற பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதிகாலை மூடுபனி ஏற்படலாம். காற்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் தூசி புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், கடல் நிலைமைகள் லேசானது முதல் மிதமானது வரை மாறுபடும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த கோடை தூறல் குடியிருப்பாளர்களுக்கு சிறிது நிவாரணம் அளித்தாலும், நாடு மற்றொரு கணிக்க முடியாத கோடை காலத்தை எதிர்கொள்வதால், தூசி முதல் இடியுடன் கூடிய மழை வரை வேகமாக மாறிவரும் வானிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel